News

ஞானசார தேரருக்கு நான் பொது மன்னிப்பு வழங்கினாலும் அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாகவே அது செல்லுப்படி அற்றதாகியது – என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ; மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.



அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் வலுவற்றதாக்கியதுடன் சிறை தண்டனையையும் உறுதி செய்தது.



இந்நிலையில் ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்வதற்கு தனது அதிகாரிகளால் செய்யப்பட்ட நிர்வாகத் தவறே காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதற்காக மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.



கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும் சிறையிலடைக்கப்படுவதற்குக் காரணமான நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்பத் தவறு என்னவென்பதை தெளிவுபடுத்தி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  விசேட அறிக்கை ஒன்ற வெளியிட்டு இந்த விடயத்தை கூறியுள்ளார்.



தேரரை விடுதலை செய்ய நீதிமன்றத்திற்கு நேரிட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்தினால் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தொழில்நுட்பத் தவறொன்று இடம்பெற்றுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் முற்றாகச் சரியானது என்றும், தான் அந்தத் தீர்ப்பை மதிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் இரண்டு பிரதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்ததோடு, நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அரசியலமைப்பின் 105 வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு இலக்கங்கள் 37417/10 மற்றும் 40042 இன் கீழ் இவ்வழக்குகள் நிலுவையில் இருந்தன.



இந்த இரண்டு வழக்குகளின் கீழ் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்காக, அது தொடர்பான ஆவணங்களை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட வேண்டியிருந்தது.



ஜனாதிபதி செயலகத்தின் சட்டப் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக சிரேஷ்ட செயலாளரினால் அது குறித்துத் தனக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், உரிய கோரிக்கை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.



அதன்படி, அமைச்சின் அனுமதி இன்றி வெறும் தனது கையொப்பம் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும், அது தன்னை தவறாக வழிநடத்திய ஒரு செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



பாக்கியசோதி சரவணமுத்துவின் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் மூலமாக சந்தியா எக்னெலிகொடவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரிலேயே இந்த சட்டப்பூர்வமான தீர்மானம் கிடைத்துள்ளது.



தனது பணியகத்தில் அப்போது கடமையாற்றிய அதிகாரிகளின் இந்தத் தவறான செயற்பாட்டின் காரணமாகவே கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் சிறைசெல்ல நேரிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டும் முன்னாள் ஜனாதிபதி, அக்காலப்பகுதியில் தனது அதிகாரிகளால் செய்யப்பட்ட அந்தத் தவறு தொடர்பில்  மகா சங்கத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.



இணையத்திலிருந்து பெறப்பட்ட உரிய நீதிமன்றத் தீர்ப்பின் பிரதியைச் சரியாக ஆய்வு செய்த பின்னரே, இந்த உண்மைகளைக் கண்டறிந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button