கொழும்பு HSBC உலகளாவிய சேவைகள் மையம் பிலிப்பைன்ஸுக்கு…
இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முன்னணி சர்வதேச நிதி நிறுவனமான HSBC வங்கியின் உலகளாவிய சேவைகள் மையம் (HSBC Global Service Centre) நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு பிலிப்பைன்ஸுக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் நாட்டின் இளைய சமுதாயத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டு, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தனது ‘X’ கணக்கில் சிறப்புப் பதிவு ஒன்றை இட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் நாட்டிலிருந்து வெளியேறுவதை வெறுமௌ பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருப்பதை விடுத்து, நாட்டின் மீது நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் HSBC உலகளாவிய சேவைகள் மையத்தின் செயற்பாடுகள் முற்றாக பிலிப்பைன்ஸுக்கு மாற்றப்படவுள்ளதாகவும், இதனால் இலங்கையில் உள்ள சுமார் 3,000 நேரடி வேலைவாய்ப்புகளும் 500 மறைமுக வேலைவாய்ப்புகளும் இழக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தி பொய்யாக இருக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாகக் கூறியுள்ள சஜித் பிரேமதாச, ஒருவேளை இத்தகவல்கள் உண்மையாக இருப்பின், அது நாட்டின் பொருளாதாரத் துறைக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதையும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.



