News

பிரதேச முரண்பாடுகளை விட தேசிய நலனில் அக்கறை செலுத்துவதே முஸ்லிங்களின் இன்றைய அத்தியாவசிய தேவை

பிரதேச முரண்பாடுகளை விட தேசிய நலனில் அக்கறை செலுத்துவதே முஸ்லிங்களின் இன்றைய அத்தியாவசிய தேவை  – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

(நூருல் ஹுதா உமர்)

முஸ்லிம் சமூகத்தில் பிரதேச மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் காணப்படும் நிர்வாக வேறுபாடுகள் தேசிய அரசியல் விவகாரங்களில் சமூகத்தின் ஒருமித்த செயற்பாட்டைப் பாதிக்கக்கூடாது. பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரதேச ரீதியான தேவைகளும் தனித்துவங்களும் காணப்படலாம். எனினும், தேசிய அரசியல், சமூக உரிமைகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்ற முக்கிய விடயங்களில் முஸ்லிம்கள் பரந்த புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டியது அவசியம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். அரகம் நூராமித் வலியுறுத்தினார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் 98 ஆண்டுகால சேவை வரலாற்றை ஆவணப்படுத்தும் வரலாற்று நூல் வெளியீடும், நூற்றாண்டை நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஆலிம்கள் கௌரவிப்பு விழாவும் சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர், சமூகத்தின் உரிமைகளையும் தனித்துவத்தையும் பாதுகாப்பதற்கு ஒற்றுமை ஒரு முக்கியமான பலமாகும். கருத்து வேறுபாடுகளை ஜனநாயக வழியில் கையாள்வதுடன், பொதுவான நலன்கள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சமூகத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும். அரசியல் ஒற்றுமை என்பது மற்ற சமூகங்களிலிருந்து விலகி நிற்பதல்ல; மாறாக, நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகளில் பொறுப்புடன் பங்கேற்று, உரிமைகளையும் கடமைகளையும் சமநிலையுடன் முன்னெடுப்பதாகும்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் கொண்டுள்ள புவிசார் அரசியல் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், தேசிய உணவுப் பாதுகாப்பில் அதன் பங்களிப்பு மற்றும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் ஒற்றுமை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர் “கிழக்கின் பாதுகாப்பும் நாட்டின் இறையாண்மையைப் பேணுவதும் இங்கு வாழும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பொறுப்பாகும்” என தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் கிழக்கில் வாழும் முஸ்லிம் சமூகம் இறைநம்பிக்கையையும் அறநெறிகளையும் அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் அமைதி, முன்னேற்றம் மற்றும் தேசிய ஒற்றுமைக்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இஸ்லாத்தின் போதனைகளையும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டலையும் இந்த நாட்டு மக்களுக்கு அமைதியும் நன்மையும் அளிக்கும் அருட்கொடையாக முன்வைப்பதே சமூகத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இறைநம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வதுடன், தாம் வாழும் மண்ணின் முன்னேற்றத்திற்கும் மக்களின் நலனுக்கும் பங்களிப்புச் செய்வது முஸ்லிம்களின் பொறுப்பாகும். நமது முன்னோர்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகளை எதிர்காலத் தலைமுறையினரும் தொடர வேண்டும்.

இலங்கையின் முன்னோர்கள் பல்வேறு சமூகங்களுடன் இணைந்து வாழ்ந்து, நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பங்களித்த வரலாற்றைக் கொண்டுள்ளனர். அந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது இன்றைய தலைமுறையினரின் கடமையாகும்.

கிழக்கின் நீண்ட கடற்கரைப் பிரதேசம் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இத்தகைய புவியியல் அமைவிடமும் இயற்கை வளங்களும் கொண்ட பிரதேசத்தில் வாழும் மக்கள், தமது பிரதேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து கூடுதல் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். கிழக்கில் வாழும் சுமார் ஏழு இலட்சம் முஸ்லிம்கள் தமது இறைநம்பிக்கையையும் சமூகப் பொறுப்பையும் பேணிக்கொண்டு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

உள்ளகப் பிளவுகள் மற்றும் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் வெளிச்சக்திகளின் தலையீடுகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடல் வளம், விவசாய நிலங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் மனித வளம் எனப் பல்வேறு துறைகளில் கிழக்கு மாகாணம் கொண்டுள்ள ஆற்றல்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானவை. கிழக்கு மாகாணத்தின் விவசாய நிலங்கள், நீர்வளங்கள் மற்றும் விவசாயிகளின் உழைப்பைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பெரும் பங்களிப்பை வழங்க முடியும்.

விவசாயம் மட்டுமன்றி, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, வர்த்தகம், கல்வி மற்றும் அரச நிர்வாகம் போன்ற துறைகளிலும் கிழக்கு மாகாண மக்கள் தமது ஆற்றல்களை விரிவுபடுத்த வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன், அவற்றை எதிர்காலத் தலைமுறையினருக்கும் பயனளிக்கும் வகையில் பயன்படுத்துவது சமூகத்தின் பொறுப்பாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button