டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா வாழ்வாதார உதவிகளை வழங்கியது.

“இலங்கையில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான காலநிலைக்கு ஏற்ப இசைவாக்கமடைந்த மற்றும் மீளெழுச்சிமிக்க வாழ்வாதார தலையீடுகள் – 2026” என்ற திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வருமானத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை சார்ந்த அனர்த்தங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வலுப்படுத்துவதற்கும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு பயனாளிக்கும் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும், ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்துவதற்கும் தேவையான உபகரணங்கள், கருவிகள், மூலப்பொருட்கள், ஆரம்பத் தொகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார உள்ளீடுகள் வழங்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்பட்ட சேதங்களின் அளவு மற்றும் அவர்களின் பாதிப்புக்குள்ளாகும் தன்மையைக் கருத்திற்கொண்டு, கொலன்னாவை பிரதேச செயலகம், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கொலன்னாவை பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவற்றுடன் இணைந்து பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்காவின் பணிப்பாளர், கொலன்னாவை பிரதேச செயலாளர், கொலன்னாவை பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்கள் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்திற்கு ஆதரவளித்த நன்கொடையாளர்கள், பங்காளர்கள் மற்றும் உள்ளூர் பங்குதாரர்களுக்கு முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், பாதிக்கப்பட்ட சமூகங்களின் நீண்டகால மீட்சிக்கும் நிலையான வாழ்வாதார மேம்பாட்டிற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தது.













