News

நாட்டில் பல இடங்களில்  தனிப்பட்ட “திரைப்பட அறைகள்” (Movie Rooms) அதிகரித்து வருவதாகவும் ஜோடிகளாக, குழுக்களாக கண்காணிப்பின்றி செல்வதால்  சமூக சீர்கேடு ஏற்படுவதாகவும் இலங்கை சினிமா தியேட்டர் சங்கம் கவலை வெளியிட்டது

நாட்டின் பல நகரங்களில் சட்டவிரோதமாகச் செயல்படும் தனிப்பட்ட “திரைப்பட அறைகள்” (Movie Rooms) அதிகரித்து வருவதாகவும், இவை முறையான திரையரங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுடன் ஒழுங்குமுறை முறைகள் மற்றும் பொது ஒழுக்கத்திற்கு முரணாக அமைகின்றன என்றும் திரைப்பட திரையிடுவோர் சங்கம் கவலை தெரிவித்து உள்ளது.

திரைப்படம் பார்ப்பதாகக் கூறி தம்பதிகள் மற்றும் குழுக்களுக்கு மணித்தியாலக் கணக்கில் அறைகள் வாடகைக்கு விடப்படுவதாகவும், முறையான கண்காணிப்பு ஏதுமின்றி இவை இயங்குவதாகவும் அச்சங்கத்தின் தலைவர் அனுராத பி. ரேகவ தெரிவித்தார்.

“குறிப்பிட்ட தொகை பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு தம்பதிக்கோ அல்லது குழுக்களுக்கோ ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் தங்குவதற்கு இந்த அறைகள் வழங்கப்படுகின்றன. இந்த அறைகளுக்குள் நடக்கும் செயல்பாடுகளை யாரும் கண்காணிப்பதில்லை. இது எங்களின் வணிகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று தொடர்ந்து அதிகரித்தால், திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதே பாதிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

சட்டப்பூர்வ விதிகளுக்கு உட்பட்டு இயங்கி, அரசுக்கு வரி செலுத்தும் பாரம்பரிய திரையரங்குகளை இத்தகைய மையங்களின் பெருக்கம் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

முறையான திரையரங்குகள் விற்கும் ஒவ்வொரு நுழைவுச்சீட்டிற்கும் 35 சதவீதம் வரி செலுத்தும் நிலையில், இத்தகைய தனியார் திரைப்பட அறைகள் வரி முறைகளுக்கு வெளியே இயங்குவதோடு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கும் எவ்விதக் கட்டணமும் செலுத்துவதில்லை என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த இடங்ளில் முறையான கண்காணிப்பு இல்லாததால், வயதுக் கட்டுப்பாடு உள்ள திரைப்படங்களைச் சிறுவர்கள் பார்க்கும் ஆபத்து உள்ளதாகவும் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இதன் பின்னணியில், திரைப்பட திரையிடுவோர் சங்கப் பிரதிநிதிகள் அண்மையில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவரையும் அதிகாரிகளையும் சந்தித்து, அனுமதியின்றி இயங்கும் இதுபோன்ற திரைப்பட அறைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

இதுகுறித்து ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க விசாரணைக்குழுக்களை அனுப்பத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக சங்கம் தெரிவித்து உள்ளது.

அத்துடன், வணிகத்தில் பருவகால மாற்றங்கள் இருந்தபோதிலும் தரமான பொழுதுபோக்கை வழங்க திரையரங்க உரிமையாளர்கள் உறுதியுடன் இருப்பதாகவும், எனவே பாரம்பரிய திரையரங்குகளைப் பாதுகாத்து நிலைநிறுத்த உரிய நடவடிக்கைகள் தேவை என்றும் ரேகவ வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button