மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின்படி, நேற்று (31) நள்ளிரவு எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவும் இல்லை – எந்தவொரு கலந்துரையாடலும் இதுவரை நடைபெறவும் இல்லை ; சிபெட்கோ

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின்படி, நேற்று (31) நள்ளிரவு முதல் இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றம் இடம்பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், அது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலும் இதுவரை நடைபெறவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சிய முனைய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மயூரி நெத்திகுமார் தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை திருத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை 414 ரூபாவாக பதிவானது.
இருப்பினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பதுடன், அது 475 ரூபாவாகவே தொடர்ந்தது.
சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலையை 50 ரூபாவால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், அது 528 ரூபா வரை அதிகரித்தது.
அதேபோல், 382 ரூபாவாக காணப்பட்ட டீசல் லீட்டர் ஒன்றின் விலையும் 10 ரூபாவால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை 392 ரூபாவாக பதிவானது.
இதற்கிடையில், 285 ரூபாவாக இருந்த மண்எண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.



