நுவரெலியாவில் அறைக்குள் BBQ அடுப்பை எரியவிட்ட நிலையில் உறங்கச் சென்ற தம்பதியினர், காலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பதிவு

நுவரெலியா, மீப்பிலிமனாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், மூடிய அறைக்குள் பார்பிக்யூ (BBQ) அடுப்பைப் பயன்படுத்தியதால் வெளியான நச்சு வாயுவைச் சுவாசித்து இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பிரதேச உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவிசாவளையைச் சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவரும், 49 வயதுடைய அவரது மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஆண் கப்பல் ஒன்றின் தலைவராகவும், பெண் வங்கி முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தம்பதியினர் நுவரெலியா, மீப்பிலிமனா பகுதியில் சுற்றுலா விடுதியொன்றின் கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர். குறித்த விடுதியின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அருகிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.
நுவரெலியா பகுதியில் நிலவிய கடும் குளிர் காரணமாக, இரவு நேரத்தில் அறைக்குள் BBQ அடுப்பை எரியவிட்ட நிலையில் உறங்கச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை உறவினர்கள் இருவரையும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து, அப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற கிராம சேவகர் வீட்டைச் சோதனையிட்டபோது, இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
மூடிய அறைக்குள் BBQ அடுப்பை எரியவிட்டுத் தூங்கியதால், அதிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) வாயுவைச் சுவாசித்தமையே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்தும் பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
(செ.திவாகரன்)



