News

NPP உள்ளூராட்சி சபைத் தலைவரின் உத்தியோகப்பூர்வ அலுவலக மேசை டிராயரில் இருந்து 30 இலட்சம் ரூபாவை காணவில்லை !!

தேசிய மக்கள் சக்தி (/மாலிமா) வசம் உள்ள பாலிந்தநுவர பிரதேச சபையின் தலைவர் சபை அலுவலகத்தில் உள்ள தனது உத்தியோகப்பூர்வ அறையின் மேசை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 30 இலட்சம் ரூபாய் பணம் மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து பதுரலிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

பாலிந்தநுவர பிரதேச சபை தலைவர் கல்ஹேனே கந்தகே டொன் சனத் ஜீவானந்த பதுரலிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி, வாகனம் ஒன்றை வாங்குவதற்காகப் பிரதேச சபையின் உப தலைவர் குமாரி முனசிங்க தனது சொந்தப் பணமான 30 இலட்சம் ரூபாயைத் தன்னிடம் ஒப்படைத்ததாகத் தலைவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த பணத் தொகையைத் தனது உத்தியோகப்பூர்வ அறையின் மேசை டிராயரில் பூட்டி வைத்திருந்ததாகவும், தினமும் டிராயரைத் திறந்து பணம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைத் தானே பரிசோதித்துப் பார்த்ததாகவும் சபைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 07ஆம் திகதி மதியம் 11.00 மணியளவில், சபை முத்திரையை எடுப்பதற்காகத் தனது அலுவலக உதவியாளரிடம் மேசை டிராயரின் சாவியைத் தலைவர் வழங்கியுள்ளார். உதவியாளர் முத்திரையைக் கொண்டு வந்து சாவியை மீண்டும் தலைவரிடம் ஒப்படைத்த நிலையில், அன்றைய தினம் மதியம் 1.15 மணியளவில் தலைவர் டிராயரைப் பரிசோதித்தபோது, அதில் இருந்த 30 இலட்சம் ரூபாய் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.

பணம் காணமால் போன உடனே உடனடியாகக் காவல்துறையினருக்குத் தெரிவிக்காமல், அப்பணத்தைத் தாங்களே தனிப்பட்ட முறையில் தேடிப் பார்க்க முயன்றதாலேயே புகார் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகத் தலைவர் தனது வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதுரலிய காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் கீழ் பிரதேச சபை அலுவலக ஊழியர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன. அரசு அல்லது உள்ளூராட்சி மன்றத்தின் உத்தியோகப்பூர்வ அலுவலக அறைக்குள் இவ்வளவு பெரிய அளவிலான சொந்தப் பணத்தை வாரக்கணக்கில் வைத்திருப்பது அரச நிதி மற்றும் நிர்வாக விதிமுறைகளின் பிரகாரம் கேள்விக்குரிய ஒரு நிலையாகும்.

Recent Articles

Back to top button