News

இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர்கள் இணைந்து, நெதன்யாஹுவைப் பதவியிலிருந்து அகற்ற ஐசன்கோட்டுக்கு ஆதரவு தெரிவிப்பு 🇮🇱



இஸ்ரேலின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், பெஞ்சமின் நெதன்யாஹுவின் அரசாங்கத்தை கூடிய விரைவில் அகற்றிவிட்டு, முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டை பிரதமராக்க ஆதரவு தெரிவிக்க சம்மதித்துள்ளனர்.

யூத தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர்கள், அக்டோபர் 27 தேர்தலுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஹெர்ஸிலியா நகரில் தங்களின் முதல் கூட்டத்தை நடத்தினர்.

120 இடங்களைக் கொண்ட நெசட்டில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அடுத்த அரசாங்கத்தை யார் அமைப்பது என்பது குறித்து அதிபர் ஐசக் ஹெர்ஸாக் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், அரபு தலைமையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா இல்லையா என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே இன்னும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அரபு கட்சிகளின் ஆதரவு அரசாங்கம் அமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.

கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட தலைவர்கள், ஐசன்கோட்டை பிரதமராக அதிபரிடம் பரிந்துரைக்க உள்ளதாகவும், ஆட்சி அமைப்பதற்கான கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் ஒப்பந்தங்களை உடனடியாகத் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெதன்யாஹுவின் கூட்டணியை அகற்றிவிட்டு உடனடியாக ஒரு ‘தேசிய அவசரகால அரசாங்கத்தை’ அமைப்பதே தங்கள் நோக்கம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஐசன்கோட், முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட், அவிக்டோர் லீபர்மன், யாயிர் கோலன் மற்றும் யாயிர் லபிட் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் இஸ்ரேலை ஒரு யூத நாடாக அங்கீகரிக்க வேண்டும் மற்றும் ஹமாஸை ஒரு ‘பயங்கரவாத’ அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற ஐசன்கோட்டின் நிபந்தனைகளை தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிபந்தனைகள் சில அரபு கட்சிகளை கூட்டணியில் இணைப்பதை தடுக்கக்கூடும்.
“நமக்கு அதிக நேரமில்லை, நாம் மிக அவசரமாக செயல்பட வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் பேசிய பென்னட் தெரிவித்தார்.
நெசட்டில் நெதன்யாஹுவின் கூட்டணி 53 இடங்களையும், எதிர்க்கட்சிகள் 48 இடங்களையும் வென்றுள்ளன.

அரபு தலைமையிலான கட்சிகள் 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
– தகவல் : அல் ஜஸீரா

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button