News

ஏபியூ (ABU) மாநாட்டிற்காக ‘சிரச’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 10 கோடி அரச நிதி அல்ல – சுற்றுலாத்துறை பணியகத்தின் நிதி: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கொழும்பில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (ABU) வருடாந்திரப் பொதுச் சபை மாநாட்டை நடத்திய ‘சிரச’ ஊடக வலைப்பின்னலுக்கு (MTV) வழங்கப்பட்ட நிதி மகா பெட்டகத்தின் பொது மக்களின் வரிக் பணம் அல்லவென்றும், அது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காகவே ஒதுக்கப்பட்ட சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் நிதியாகும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அண்மையில் நிறைவடைந்த ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 61ஆவது பொதுச் சபை மாநாட்டிற்காக சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மூலம் 104 மில்லியன் ரூபாய் அனுசரணைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், அந்த நிதி நிதி அமைச்சகத்திலோ அல்லது மகா பெட்டகத்திலோ ஒதுக்கப்பட்ட பணம் அல்லவெனவும், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் 5 டாலர் கட்டணம் மற்றும் ஹோட்டல் வருமானத்திலிருந்து அறவிடப்படும் 1 சதவீத செஸ் வரியைக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் நிதியிலிருந்தே அந்தச் செலவு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இலங்கையின் அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் 6 மாத்திரம் இந்த ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் உறுப்பினர்களாக உள்ளதாகவும், மாநாட்டை நடத்தும் நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் தெரிவு செய்யவில்லை என்றும் மலேசியாவில் உள்ள ABU செயற்குழுவே அதனைத் தீர்மானித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டனர். அதற்கமைய, இம்முறை மாநாட்டை நடத்தும் வாய்ப்பு குறித்த தனியார் நிறுவனத்திற்குக் கிடைத்ததுடன், உலகின் முன்னணி வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் 225ஐப் பிரதிநிதித்துவப்படுத்தி 66 நாடுகளிலிருந்து வருகை தந்த 350க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இலங்கையின் சுற்றுலாத்துறை பிம்பத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த அனுசரணை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட பணிப்பாளர் சபையின் தீர்மானத்திற்கு இணங்கவே இது இடம்பெற்றுள்ளதுடன், நிதித் தொகைக்கேற்ப அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button