கம்பஹா நீதவானுக்கு அவசர இடமாற்றம்

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதன் மூலம் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகத் தீர்மானித்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் மா அதிபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரிடம் கோரிக்கை விடுத்த கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன உடனடியாகச் செயற்படும் வகையில் நீதிபதிகள் பயிற்சிக் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் அவர்களால் கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவை இடமாற்றம் செய்வதற்கான குறித்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
அப்பாவி குடிமக்களுக்கு எதிராக வீண் வழக்குகள் எதையும் தாக்கல் செய்ய வேண்டாமென, அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உள்ளடக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு நீதவான் இதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார். அதற்கேற்ப பொலிஸ் மா அதிபர் செயற்படாத காரணத்தினால், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரால் கம்பஹா நீதவானுக்கு எதிராக நீதிசேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், அந்த முறைப்பாடு தொடர்பான அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிசேவைகள் ஆணைக்குழு நீதவானுக்கு அறிவித்திருந்தது.
நீதவான் குறித்த அவதானிப்புக்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாகச் செயற்படும் வகையில் நீதிபதிகள் பயிற்சிக் நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



