News

அணுசக்தித் தாக்குதலுக்குத் தயாராக ஈரான் மக்களுக்கு மருந்துகள் விநியோகம்.. உச்சக்கட்ட போர்ப் பிரகடனக் குறியீடு ‘C100’ வெளியீடு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது புதிய ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து வரும் நிலையில், வரவிருக்கும் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனது அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு ‘அயோடின் மாத்திரைகளை’ ஈரான் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க ஆயுதப் படைகள் ஈரான் மீதான புதிய தாக்குதல்களுக்குத் தயாராகி வரும் சூழலில், ஈரான் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஈரான் சுகாதார அமைச்சகத்தின் பேச்சாளர், போர்ப்பதற்றம் நிலவும் காலங்களில் அணுசக்தி நிலையங்களிலிருந்து 2 முதல் 3 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிக்கும் மக்களுக்கு இந்த முன்னெச்சரிக்கை மருந்துகளை வழங்குவது வழக்கமான நடைமுறைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“ஆம், நாங்கள் மக்களுக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகித்து வருகிறோம். டொனால்ட் ட்ரம்பை இனி நம்ப முடியாது, அவர் இந்தத் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன” என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். ஒருவேளை அணுசக்தி மையத்திற்கு சேதம் ஏற்பட்டு கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டால், மனித உடலில் உள்ள தைராய்டு சுரப்பி கதிர்வீச்சு அயோடினை உறிஞ்சுவதைத் தடுக்க இந்த அயோடின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

கடுமையான பாதுகாப்பிற்குள் இருக்கும் ஈரானின் ‘பிகாக்ஸ் மவுண்டன்’ (Pikaks Mountain) அணுசக்தி மையம் மீது அமெரிக்கா தீவிரக் கவனம் செலுத்தி வருவதாகவும், ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுக்க வாஷிங்டனின் பாதுகாப்புப் படைகள் விரைவான போர்த் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவுடனான ராணுவ மோதல் மிகக் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதால், ஈரான் அரசாங்கம் தனது நாட்டில் செயல்படுத்தக்கூடிய மிக உயர்ந்த ராணுவ எச்சரிக்கைக் குறியீடான ‘கோட் 100’ (Code 100) உச்சக்கட்ட போர்த் தயாரிப்பை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாமா என்பது குறித்துத் தீர்மானிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தனது தேசியப் பாதுகாப்பு கவுன்சிலுடன் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாக ‘ஃபாக்ஸ் நியூஸ்’ குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, நவம்பர் 9-ஆம் தேதி மத்திய கிழக்குப் பகுதியில் சந்திர வெளிச்சம் இல்லாத அமாவாசை இரவு என்பதால், அத்தகைய இருண்ட இரவுகள் இரகசிய ராணுவ நடவடிக்கைகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஊடகங்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், போரை மீண்டும் தொடங்குவது குறித்து வாஷிங்டன் விரைவில் இறுதி முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாக முடக்கி, அது இனி எக்காலத்திலும் தலைதூக்காது என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“முடிந்தால் ஈரானின் மற்ற பகுதிகளை முழுமையாக அழிக்காமல் இருக்க விரும்புகிறேன். ஆனால் நான் ஒருவேளை அதைச் செய்ய வேண்டியிருக்கலாம். அந்த முடிவு என்னவென்பதை நீங்கள் அனைவரும் மிக விரைவில் அறிந்துகொள்வீர்கள்” என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். அமெரிக்க மத்திய கட்டளைகம் (US Central Command) ஈரான் மீதான மாபெரும் தாக்குதலுக்குத் தயாராக இருந்தபோதிலும், வெள்ளை மாளிகையிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தனது பூமியைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று இராக் அறிவிப்பு

இதற்கிடையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்து இராக் பிரதமர் அலி ஃபாலே அல்-சைதி (Ali Faleh Al-Zaidi) டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசி தனது கடுமையான நிலைப்பாட்டைத் வெளிப்படுத்தியுள்ளார். அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான முனையமாக இராக் நிலப்பரப்பையோ அல்லது வான்வெளியையோ எக்காரணம் கொண்டும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், நாடுகளின் இறையாண்மையை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் இராக் பிரதமர் அலுவலகம் ‘X’ தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

Recent Articles

Back to top button