கராப்பிட்டியவில் 300 கட்டில்களுடன் 10 மாடிகளைக் கொண்ட புதிய வைத்தியசாலைத் தொகுதி திறப்பு

கராப்பிட்டியவில் அமைந்துள்ள ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 10 மாடிகளைக் கொண்ட புதிய Professorial விடுதித் தொகுதி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
.
இந்தத் திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு வரலாற்றில் இல்லாத அளவு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கல்விக்காக 740 பில்லியன் ரூபாவும் சுகாதாரத்திற்காக 710 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
.
2019 ஆம் ஆண்டில் 1.3 பில்லியன் ரூபா செலவாகும் என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட காலி தேசிய வைத்தியசாலையின் Professorial பிரிவு, இறுதியில் 2.808 பில்லியன் ரூபா செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
.
இந்த வைத்தியசாலையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக மேலும் 8.5 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், சப்ரகமுவ, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மருத்துவ பீடங்களுக்கும் புதிய Professorial பிரிவுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
.
MRI மற்றும் LINAC இயந்திரங்கள் உள்ளிட்ட நவீன மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 21.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து வைத்தியசாலைக் கட்டிடத் திட்டங்களின் நிர்மாணப் பணிகளும் 2028 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
.
புதிய 10 மாடிக் கட்டிடத் தொகுதியானது மருத்துவம், சத்திரசிகிச்சை, உளவியல் மற்றும் விசேட மகப்பேறியல் விடுதிகளை உள்ளடக்கியதாக 300 கட்டில்களைக் கொண்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் எட்டு கட்டில்களைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), மூன்று நவீன சத்திரசிகிச்சை கூடங்கள், எட்டு வெளிநோயாளர் ஆலோசனை அறைகள் மற்றும் பிரத்தியேக மருத்துவப் பரிசோதனை மண்டபம் ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
.
உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவியை உயர்கல்வி அமைச்சு வழங்கியிருந்ததுடன், சுகாதார அமைச்சினால் காணி ஒதுக்கப்பட்டது. மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்தினால் (CECB) இதன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
.
இத்திட்டத்திற்கு ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ மாணவர் பழைய மாணவர் சங்கம் (RUMSAA) மற்றும் ஏனைய நன்கொடையாளர்களும் பங்களிப்பு வழங்கியுள்ளனர். சீனாவின் குவாங்சோவில் உள்ள சீன மகாபோதி விகாரையின் அனுசரணையுடன், தூதரக அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் ஊடாக விடுதிகள், சத்திரசிகிச்சை கூடங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான வைத்தியசாலைக் கட்டில்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
.
வரவேற்பு மண்டபம், சிகிச்சை நிலையங்கள், பரிசோதனை மண்டபம் மற்றும் மருத்துவ விடுதிகளுக்குத் தேவையான 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தளபாடங்களைப் பழைய மாணவர் குழுக்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளன. அத்துடன் ஒரு சத்திரசிகிச்சை கூடத்தை முழுமையாக நவீனமயப்படுத்துவதற்காக 150,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க சர்வதேச லயன்ஸ் கழகமும் இணக்கம் தெரிவித்துள்ளது.
.
2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படாதிருந்த சுகாதாரத் துறை ஆளணி மீளாய்வு தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 7,000 வைத்தியர்களுக்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த 1,472 வைத்தியர்களுக்கு நியமனங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், குறித்த வைத்தியர்கள் உட்பட கிட்டத்தட்ட 2,000 பேருக்கு நியமனங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
.
மேலும் 3,000 தாதியர்கள் மற்றும் 500 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



