“சாவு தீர்மானிக்கப்பட்ட ஒரு நாட்டை நாங்கள் பொறுப்பேற்று. இப்போது வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளோம்” – தேவானந்த சுரவீர

கடந்த காலப்பகுதியில் முழுமையாகப் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து அழிவின் விளிம்பில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக அரசாங்கம் ஒரு தனித்துவமான மாற்றத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2024ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தெளிவான இலக்கும், அதனை அடைவதற்கான திட்டமும் தம்மிடம் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டங்கள் ஊடாக நாட்டை படிப்படியாகச் சிறந்த பாதையில் வழிநடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டது அதலபாதாளத்தில் வீழ்ந்து, அழிவையும் மரணத்தையும் எதிர்நோக்கியிருந்த ஒரு நாட்டையே. அவ்வாறானதொரு நாட்டைப் பொறுப்பேற்ற எங்களுக்கு, பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான தெளிவான இலக்கு இருந்தது. எனவே, இந்த வரவு செலவுத் திட்டத்தைப் பக்கச்சார்பின்றியும் ஆழமாகவும் ஆராய்ந்து பார்க்குமாறு நாட்டின் புத்திஜீவிகளிடமும் பொதுமக்களிடமும் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், முதலீடுகளை ஊக்குவித்தல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டுதல், அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதியைப் பாதுகாத்தல் ஆகிய விடயங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 2025ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் முக்கியமானதொரு திருப்புமுனையாக அமையும் என்றும், வெளிநாட்டு நாணயப் பரிவர்த்தனைகளை முறைப்படுத்துதல், இலங்கை ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்துதல் மற்றும் வீழ்ச்சியடைந்த அனைத்துத் துறைகளையும் மீளக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கான வலுவான அடித்தளம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



