எமது அரசாங்கத்தில் யாராவது ஊழல் மோசடியுடன் தொடர்பு பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு

எமது அரசாங்கத்தில் யாராவது ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) அன்று பிரதமரிடமான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சமிந்த விஜேசிறி எம்.பி. தனது கேள்வியின்போது,
கடந்த காலத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி, சீனி மோசடி மற்றும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தபோதும் இதுவரை அதுதொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம், அரசாங்கம் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதுபோன்று, இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் உண்மையாக விசாரணை மேற்கொள்ளுமா?
குறிப்பாக, கடந்த காலத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடிக்குச் சமமாக இந்த அரசாங்கத்தில் உப்பு மோசடி இடம்பெற்றுள்ளது. அதேபோன்று சீனி மோசடிக்குச் சமமாகக் கொள்கலன் விடுவித்த மோசடி இடம்பெற்றுள்ளது. எனவே இந்த மோசடிகள் தொடர்பிலும் அரசாங்கம் முறையான விசாரணை மேற்கொள்ளுமா? என கேட்டார்
இதற்கு பிரதமர் பதிலளிக்கையிலேயே எமது அரசாங்கம் ஊழல் மோசடிகள் தொடர்பில் உண்மையாகவே விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. அவ்வாறு இல்லாமல் இதன்மூலம் அரசாங்கத்துக்கு கெளரவத்தை அதிகரித்துக்கொள்வதற்காக விசாரணைகள் மேற்கொள்வதில்லை என்றார்.

