தந்தை மொபைல் தொலைபேசியை பறித்து உடைத்ததை அடுத்து மனமுடைந்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி #இலங்கை

உண்மையில், அலைபேசிகளையும் ஏனைய தொழிற்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்தி இளைஞர்கள், யுவதிகள் பலர் முன்னேற்றமடைந்துள்ளனர். influencer , freelancer , buying selling online போன்ற சட்ட ரீதியான துறைகளில் கால்பதித்து வருமானமும் உழைத்து வருகின்றனர்.
எனினும், மொனராகலையில் இடம்பெற்ற சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நக்கல்ல 16வது மைல்கள் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியான 13 வயது சிறுமியின், தாய் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். அந்த மாணவியான சிறுமி, தனது பாட்டி மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
அந்த மாணவி அப்பகுதியில் இளைஞன் ஒருவனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். அந்த இளைஞன் மாணவிக்கு கைத்தொலைப்பேசி ஒன்றையும் பரிசளித்துள்ளார்.
இந்த விவகாரம் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து அவர் தனது மகளை எச்சரித்து, கைத்தொலைபேசியை பிடுங்கி உடைத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி பாட்டியுடன் வீட்டில் தனியாக இருக்கும் போது படிப்பதாக கூறி அறையின் கதவை மூடிக்கொண்டுள்ளார். நீண்டநேரமாகியும் பேத்தி வெளியே வராமையால், அச்சமடைந்த பாட்டி, கதவை தட்டியுள்ளார்.
கதவைத் திறக்காததால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் மாணவி கிடந்துள்ளார்.
அயலவர்களின் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் எழுதிய கடிதமொன்று அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக. தெரிவித்த மொனராகலை பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக

