ஈரானியக் கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதித்ததோடு, அதன் 208 மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் கவனிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை மிகவும் வரவேற்கிறேன் ; நாமல் ராஜபக்ஷ

ஈரானியக் கப்பலான IRIS Bushehr இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையவும், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடவும் அனுமதித்ததோடு, அதன் 208 மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் கொழும்புக்கு அழைத்து வர ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.
“சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின் மனிதாபிமான கடப்பாடுகளுக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் ஒரு சரியான நேரத்திலான நடவடிக்கை இது,” என்று கூறிய ராஜபக்ஷ, தற்போதைய மோதல்களில் நடுநிலைமையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
‘X’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகளாவிய மோதல்களில் இலங்கையின் நிலைப்பாடு நடுநிலையாக இருப்பதை உறுதி செய்யும் அதேவேளையில், தேவை ஏற்படும் போதெல்லாம் இலங்கை தனது மனிதாபிமான சைகைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடா பிராந்தியத்திலும் உலகளவிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் என்று ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா மற்றும் ஏனைய பிராந்திய பங்காளிகளுடன் இலங்கை நெருக்கமாக பணியாற்றுவது சமமான முக்கியத்துவம் வாய்ந்தது,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



