நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை – டொலர் தடுப்பாடு ஏற்படாமல் இருக்க சகல பிரஜைகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் ; ஜனாதிபதி
நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
முழு நாடும் ஒன்றாக எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளமையினால் எமது பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
எமது முக்கிய வருமான வழியாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.
கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட ஏப்ரலில் 29 சதவீதம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.
உலகளாவிய பிரச்சினை காரணமாக நாட்டின் ஏற்றுமதியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேபோல் இலங்கையர்களால் வௌிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணமும் குறைவடைந்துள்ளது.
இவை டொலரின் பற்றாக்குறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், ரூபாவின் இந்த வீழ்ச்சி காரணமாக எரிபொருளுக்கான ஒதுக்கமும் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காக கடந்த பெப்ரவரி மாதம் 98 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு ஏற்பட்டிருந்தது.
மார்ச் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவினம் 216 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது.
ஏப்ரலில் 368 மில்லியன் அமெரிக்க டொலராகவும், கடந்த மே மாதத்தில் 522 மில்லியன் அமெரிக்க டொலராகவும் அதிகரித்தது.
எனவே மாதம் ஒன்றுக்கான எரிபொருள் இறக்குமதி செலவினம் 500 மில்லியன் அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளது.
இது எமது ரூபாவின் வீழ்ச்சியையும் டொலருக்கான கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் மீளாய்வை முன்னெடுத்து வருகின்றோம்.
இதில் அரசாங்கமும் தற்போது யோசனை அதற்கு முன்வைத்துள்ளது.
இதனால் குறுகிய காலத்திற்கு எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்த வேண்டும்
இறக்குமதி செலவினத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
டொலர் தடுப்பாடு ஏற்படாமல் இருக்க சகல பிரஜைகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கோருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.



