நகருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள், மரத்திலிருந்த பலாப்பழங்களை உண்பதற்காக வீட்டின் மதில் சுவரை இடித்துத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த சம்பவம் பதிவு

சிகிரியா நகருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள், வீட்டிலுள்ள பலா மரத்திலிருந்த பலாப்பழங்களை உண்பதற்காக வீட்டுத் தோட்டத்தின் மதில் சுவரை இடித்துத் தள்ளியுள்ளன.
சுமார் 200 அடி நீளமான தோட்டத்துச் சுவரை இடித்துவிட்டு, செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 3.30 மணியளவில் மூன்று காட்டு யானைகள் கொண்ட கூட்டம் தோட்டத்திற்குள் நுழைந்து பலாப்பழங்களை உண்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்குத் அறிவித்தும் எந்தவிதப் பயனும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். தங்களது வீடு வனவிலங்கு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் அமைந்திருந்தாலும், வாகனம் இல்லாத காரணத்தினால் சம்பவ இடத்திற்கு வர முடியவில்லை என்ற சாக்குப் போக்கையே அதிகாரிகள் கூறியதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சிகிரியா பகுதி மக்கள் நீண்ட காலமாக காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாகவும், தொடர்ந்தும் பீதியிலேயே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். பகல் மற்றும் இரவு வேளைகளில் சிகிரியா பகுதிக்கு வந்து வீதிகளில் நடமாடும் சுற்றுலாப் பயணிகள் இத்தகைய மூர்க்கத்தனமான யானைகளின் தயவிலேயே வாழ்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.



