சட்டத்தில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து, எல்லை நிர்ணயமொன்றையும் செய்த பின்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது

சட்டத்தில் நிலவும் ஒருசில குறைபாடுகளின் காரணமாகவும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் மாகாண சபைத் தேர்தலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எல்லை நிர்ணயமொன்றை செய்ய வேண்டியது அவசியமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன உரிய நேரத்தில் இடம்பெற்றுள்ளன. மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. இருந்தபோதும் தற்போது சட்டத்தில் நிலவும் ஒருசில குறைபாடுகளின் காரணமாகவும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எல்லை நிர்ணயமொன்றை செய்ய வேண்டும்.
அதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றத் தினூடாக செய்து கொடுக்கப்பட்டவுடனேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம். அதன்போது மக்கள் நிலைப்பாட்டை அவதானிக்க முடியும்.
பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராகவே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீண்டகாலம் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் கருத்துத் தெரிவிக்கிறார் என்றால் அதுவே நீதிமன்ற சுயாதீனத் தன்மைக்குள்ள பிரச்சினையாகும்.
இதற்கு முன்னரும் பாராளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் வழக்கு விசாரிப்பவர்கள் தொடர்பில் அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைக்கிடை கருத்து வெளியிட்டுள்ளார்கள். இதுவே நீதிமன்றம் மீதான அச்சுறுத்தல். நீதிமன்றம் சுயாதீனமாக இயங்கிவரும் சந்தர்ப்பத்தில் வழக்கு விசாரணை செய்பவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேகம் ஏற்படும் வகையிலான கருத்துகளை முன்வைக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினூடாகவே நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சிக்கிறார்கள். இதுவே நீதித்துறை மீதான அவதூறு.
நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை வைக்கும்போது, வழக்கு விசாரணைகள் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பது அதிசயமான விடயமல்ல. ஒருவேளை எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் அதுதொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம்.
பிரதம நீதியரசருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, ஒருசில மேன்முறையீட்டு வழக்குகளை அந்தப் பிரதேசங்களில் விசாரணைக்குட்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு செய்தால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி ஏற்படும். அதேபோன்று உயர் நீதிமன்றத்தில் நிலவும் தற்போதைய பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.
இதற்கிடையில், நீதிபதிகளை புதிதாக சேவைக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பது நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது போன்றே, தற்போதுள்ள நீதியரசர்கள், நீதிபதிகளிடம் அதிக சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்களின் ஓய்வு வயதெல்லையை இரண்டு வருடங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வழக்கு விசாரணைகளை விரைவுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சட்டத்துறை சார்ந்தவர்களும் வழக்கு விசாரணைகளை விரைவாக நிறைவு செய்யவே விரும்புவார்கள் என்பதால், அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.



