News

அன்று ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் ஆடைத் துறையின் வளர்ச்சிக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவுக்காக, இன்று அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினரிடம் சஜித் தனது நன்றியை தெரிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதியும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், பாராளுமன்றத்தின் ஆயுதப் படை மற்றும் புலனாய்வுக் குழுக்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வருபவருமான அமெரிக்க பிரதிநிதி கிறிசி ஹௌலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது, பொருளாதார ஒத்துழைப்பு, ஆளுகை, கல்வி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை என்பவற்றுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு, இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமெரிக்க தூதுக்குழுவின் முன்பாக வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பங்காண்மையை வெளிப்படுத்தும் வகையில், கடந்த காலங்களில் ஐக்கிய அமெரிக்க குடியரசு இலங்கைக்கு பெற்றுத் தந்த தொடர்ச்சியான ஆதரவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியைத் தெரிவித்தார்.

அத்துடன், காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு முறை இலங்கையின் ஆடைத் துறையை விரிவுபடுத்துவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாகக் குறிப்பிட்டு அவர் ஆடைத் துறை குறித்து விசேடமாகத் தெரிவித்தார்.

இலங்கையின் ஆடைத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா ஆற்றிய முக்கிய பங்குக்காக அவர் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.

அமெரிக்க பாராளுமன்றப் பிரதிநிதியும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான கிறிசி ஹௌலகன், ஜனநாயக விழுமியங்கள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் இலங்கையுடனான தொடர்ச்சியான உறவுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கை மக்களுக்கு நிலைபேறான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பரஸ்பர முன்னுரிமைகள் குறித்தும் இரு தரப்பினரும் பெறுமதியான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளைப் பயக்கும் வகையில், இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பை எதிர்காலத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு முடிவுற்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button