News

இன்னொரு தரப்பிடம் பணம் வாங்கிக்கொண்டு, தான் வேலை செய்யும் கம்பெனி ரகசியங்களை வெளியிட்டவருக்கு 5 கோடி ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு #இலங்கை

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் செயல்படும் தனியார் கையுறை உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வணிக இரகசியங்களை நிதி இலாபத்திற்காக மற்றொரு நிறுவனத்துக்கு கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளருக்கு, ரூ.5 கோடி நட்டஈடும் வழக்குச் செலவுகளும் செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன, நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரின் இணக்கத்துடன் வழங்கிய தீர்ப்பில், வர்த்தக மேல் நீதிமன்றம் சாட்சிகளை முறையாக மதிப்பீடு செய்யவில்லை என்றும், பிரதிவாதி நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வணிக இரகசியங்களை நிதி இலாபத்திற்காக மூன்றாம் தரப்பினருக்கு வழங்கியமை சாட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நிறுவனத்தின் காப்புரிமைக்கு உட்பட்ட இரகசியத் தகவல்களை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ அல்லது சுரண்டவோ கூடாது என பிரதிவாதிக்கு நிரந்தரத் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.5 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதால், அந்தத் தொகையையும் வழக்குச் செலவுகளையும் பிரதிவாதி செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனுடன், 2019 மார்ச் 29ஆம் திகதி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரத்து செய்த உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை ஏற்று இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button