கல்முனை வைத்திய உதவியாளர்களின் ஆடை விவகாரத்தை அரசியலாக்காமல் அரச மட்டத்தில் தீர்வு காண வேண்டும் – ஹிதாயத் சத்தார்

கல்முனை வைத்திய உதவியாளர்களின் ஆடை தொடர்பான விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதை விட, ஆளும் தரப்பில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் உயர்மட்டத்துடன் பேசி உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் குரல் கொடுக்கவில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், ஆளும் தரப்பில் உள்ள உறுப்பினர்களே இந்த விடயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டரீதியான தீர்வை பெற்றுக்கொடுப்பதே பயனுள்ளதாகும்.
இந்த அரசாங்கத்திற்கு பெருமளவிலான சிறுபான்மை மக்களும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் தரப்பில் உள்ளனர். எனவே, இந்த விடயம் மேலும் இன, மத பிரச்சினையாக வளர்வதற்கு இடமளிக்காமல், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் தெளிவான சுற்றுநிருபங்கள் மற்றும் விதிமுறைகள் இருக்கின்றது, அவை அனைத்து அரச நிறுவனங்களிலும் பாரபட்சமின்றி ஒரே விதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவற்றை மீறி இன அல்லது மத அடிப்படையில் பாரபட்சமாக செயற்பட்டவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்க முடியும். அரசியல் இலாபத்தை விட சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகங்களினதும் கண்ணியம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஹிதாயத் சத்தார் மேலும் தெரிவித்தார்.



