உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் வழக்கு – 24 பிரதிவாதிகளுள் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகப் பெயரிடப்பட்டனர் – மிகுதி 9 பிரதிவாதிகளை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (22) கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேருக்குமான தண்டனை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உட்பட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்தன.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



