விமான பரிவர்த்தனையில் செலுத்தப்பட்ட முழுத் தொகையும் உக்ரைனின் அரச நிறுவனத்தைச் சென்றடையவில்லை, சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடாக கையாளப்பட்டிருக்கலாம் என்பதே குற்றச்சாட்டு..

நாமலை மிஞ்சும் அளவுக்கு கோட்டா?
இன்று ஏன் கோட்டா FCID க்கு அழைக்கப்பட்டார்? | உண்மை இதுதான்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ச இன்று நிதிக் குற்ற விசாரணைப் பிரிவான FCID முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குகின்றார்.
அவரது இன்றைய விசாரனையானது 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய MiG-27 போர் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையுடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக MiG-27 போர் விமானங்களை கொள்வனவு மற்றும் புதுப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார்.
இந்த கொடுக்கல் வாங்கலில் இலங்கை அரசாங்கத்தால் செலுத்தப்பட்ட பணத்தின் ஒரு பகுதி Bellimissa Holdings என்ற British Virgin Islands இல் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் ஊடாகச் சென்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FCID விசாரணைகளில் பின்னர் முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, பரிவர்த்தனையில் செலுத்தப்பட்ட முழுத் தொகையும் உக்ரைனின் அரச நிறுவனத்தைச் சென்றடையவில்லை என்றும், சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கை நாணயப்படி சுமார் 230 கோடி முறைகேடாக கையாளப்பட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முன்னாள விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக FCID முன்னிலையில் ஆஜராகி, இதே MiG விமானக் கொள்வனவு தொடர்பாக ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் வழங்கியிருந்தார். அடுத்த நாளே அந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ச FCID முன்னிலையில் ஆஜராகியிருக்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால், 2006 MiG-27 கொள்வனவு தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து நடைபெறும் விசாரணையில் தகவல்களைப் பெறுவதற்காகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2026.09.11
✍🏻 M. I. Iyasdeen



