News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடும் பெருந்தலைவர் நினைவேந்தலும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடும் பெருந்தலைவர் நினைவேந்தலும்.

நாச்சியாதீவு பர்வீன்.


காலம் பல நினைவுகளை மறக்கச் செய்கிறது. ஆனால், ஒரு சமூகத்தின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்த சில ஆளுமைகளின் நினைவுகளை காலத்தால் ஒருபோதும் அழிக்க முடியாது. அத்தகைய வரலாற்று ஆளுமைகளில் ஒருவராக இலங்கை  அரசியல் வரலாற்றில் தனக்கென அழியாத தடத்தைப் பதித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள் இன்னும் நமது நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் மறைந்து இருபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அவரது அரசியல் சிந்தனைகளும், சமூகப் பார்வையும், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பான அவரது குரலும் இன்றும் நினைவுகூறப்படுகின்றன. பாராளுமன்றத்தில் கர்ச்சிக்கின்ற ஒரு சிங்கமாக அவர் தனித்து நின்று போராடி வெற்றி பெற்ற பல சந்தர்ப்பங்களை நாம் நினைவு கூறலாம். 

ஒரு தலைவன் மறைவது என்பது அவரது உடல் மறைவாக இருக்கலாம்; ஆனால் அவர் உருவாக்கிய சிந்தனையும், அவர் விதைத்த அரசியல் விழிப்புணர்வும், அவர் உருவாக்கிய அமைப்பும் தொடர்ந்தால், அந்தத் தலைவர் சமூகத்தின் நினைவில் தொடர்ந்து வாழ்கிறார் என்பதே வெளிப்படையான உண்மையாகும்.

அந்த உன்னத தலைவர் அஷ்ரப் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் அவர் உருவாக்கிய இன்று பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கின்ற
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடும் எதிர்வரும் 16.09.2026 புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் சட்ட முதுமாணி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் சமூகத்தின் மீதான அளவு கடந்த பற்றும் அக்கறையுமே முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவமான அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு ஏதுவான காரணியாக அமையவில்லை. மாறாக பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டதை அவர் நேரடியாகவே கண்டு கொண்டதன் பின்புலத்திலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற இந்த மரத்திற்கான விதையை அவர் நட்டினார் எனலாம். 

அஷ்ரப் அவர்கள் உருவாக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் எதிர்பார்ப்புகளையும் அபிலாஷைகளையும் தேசிய அரசியல் அரங்கில் வலுவாக வெளிப்படுத்துவதில் அக்கட்சி முக்கிய பங்காற்றியது. அது மாத்திரம் இன்றி தேசியத்திலும் முஸ்லிம் சமூகத்தில்  அரசியல் ரீதியான  விழிப்புணர்வையும் வலுவான அங்கீகாரத்தையும் அது பெற்றது.  முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகள், சமத்துவம், அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற விடயங்களை அரசியல் விவாதங்களின் மையத்திற்குக் கொண்டுவருவதில் அஷ்ரப் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

பெரும் தலைவர் அஷ்ரப் அவர்கள் இன்று வரைக்கும் சமூக மட்டத்தில் பேசப்படுவதற்கு பிரதான காரணம் அவரிடம் இருந்த சிறந்த தலைமைத்துவ பண்பும் ஆளுமையும் ஆகும். எப்போதும் தனது சமூகத்தை தனித்துவத்தோடும் கௌரவமிக்க ஒரு சமூகமாகவும் உருவாக்குவதே அவரது கனவாக இருந்தது. இந்த சமூகம் பற்றிய அவரது கனவு மிகப் பெரியதாகும். அந்தக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதில் அவர் அரும்பாடு பட்டார். இருந்த போதும் அவரது பயணம் இடையில் தடைப்பட்டது.

தலைவர் அஷ்ரப் அவர்களின் திடீர் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஒரு இயக்கத்தின் நிறுவனர் தலைவரை இழந்த அந்தக் கடினமான காலகட்டத்தில், கட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் தற்போதைய தேசியத் தலைவர் கௌரவ சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்கள்.
அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர் கட்சியை வழிநடத்துவது சாதாரணமான பொறுப்பாக இருக்கவில்லை. கட்சியின் உள்ளக சவால்கள், அரசியல் மாற்றங்கள், பல்வேறு தடைகள், விமர்சனங்கள் மற்றும் காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை முன்னோக்கி நகர்த்த வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு ரவூப் ஹக்கீம் அவர்களின் மீது விழுந்தது.
அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், கட்சியின் தனித்துவமான அரசியல் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டு, மாறிவரும் தேசிய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்சியை வழிநடத்த முயன்றுள்ளார். பல்வேறு அரசியல் தடைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து, இலங்கை முஸ்லிம் மக்களிடையே பரந்தளவிலான ஆதரவைப் பெற்ற ஒரு தேசிய அரசியல் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து நிலைத்திருப்பது அதன் அரசியல் பயணத்தின் முக்கிய அம்சமாகும்.
இவ்வாறான ஒரு நீண்ட அரசியல் பயணத்தின் பின்னணியில், அஷ்ரப் அவர்களின் நினைவு என்பது வெறுமனே கடந்த காலத்தை நினைவுகூரும் நிகழ்வாக மட்டும் அமையக்கூடாது. அது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் அமைய வேண்டும். அவர் கனவு கண்ட சமூகத்தின் அரசியல் முன்னேற்றம் எந்த நிலையில் உள்ளது? அவரது அரசியல் சிந்தனைகளில் எவை காலத்திற்கேற்ப தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்? முஸ்லிம் சமூகத்தின் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவரது அரசியல் மரபிலிருந்து எத்தகைய வழிகாட்டுதல்களைப் பெற முடியும்? போன்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய தருணமாகவும் இது அமைகிறது.

இந்தப் பின்னணியில், எதிர்வரும் 16ஆம் தேதி காத்தான்குடியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ள மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடும் முக்கியத்துவம் பெறுகின்றன. கட்சியின் தேசியத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, ஒரு தலைவரை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமன்றி, கட்சியின் கடந்த காலப் பயணத்தையும் எதிர்கால அரசியல் பாதையையும் மீளாய்வு செய்யும் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகவும் அமைய வேண்டும்.

இந்நிகழ்வின் நினைவுப் பேருரையை இந்திய தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஏ.எம்.ஷாஜஹான் அவர்களும்,  அதிதி உரையை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே. நவாஸ் கனி அவர்களும் நிகழ்த்த உள்ளனர். பெருந்தலைவர் நினைவுகள் எனும் தலைப்பில் தற்போதைய தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் பெருந்தலைவருடனான தனது  நினைவுகளை பகிர உள்ளார்.

அஷ்ரப் அவர்கள் இல்லாத இருபத்தாறு ஆண்டுகள், ஒரு தலைமுறையின் கால அளவாகும். இன்று அரசியலில் களமிறங்கும் பல இளம் தலைமுறையினர் அவரை நேரடியாக சந்தித்திருக்காமலும் இருக்கலாம். ஆனால் அவரது பெயரும், அவர் உருவாக்கிய அரசியல் இயக்கமும், அவரது சமூகப் பங்களிப்பும் அவர்களிடம் சென்றடைந்துள்ளன. இதுவே ஒரு தலைவரின் உண்மையான அரசியல் மரபாகும்.
ஒரு தலைவர் உயிரோடு இருப்பது அவரது உடலால் அல்ல; அவரது கொள்கைகள் மக்களின் மனங்களில் உயிரோடு இருப்பதாலேயே. அந்த வகையில் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள் மறைந்தாலும், அவரது நினைவுகள் மறையவில்லை. அவர் உருவாக்கிய அரசியல் பாதையும், சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்காக அவர் எழுப்பிய குரலும் இலங்கை அரசியல் வரலாற்றில் தொடர்ந்து பேசப்படும்.
மறைந்த தலைவரை நினைவுகூர்வது கடந்த காலத்தைப் பார்ப்பதற்காக மட்டும் அல்ல; அவர் காட்டிய பாதையில் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை சிந்திப்பதற்காகவும் ஆகும்.
அஷ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற அரசியல் மரபை பொறுப்புடன் மதிப்பதும், காலத்தின் தேவைகளுக்கேற்ப அதனை முன்னெடுத்துச் செல்வதும் இன்றைய தலைமுறையின் கடமையாகும்.
தலைவர் மறைந்தார்; ஆனால் அவரது நினைவுகள் மறையவில்லை.
காலம் கடந்தாலும் அவரது அரசியல் அத்தியாயம் முடிவடையவில்லை.
அது இன்னும் தொடர்கிறது… மக்களின் நினைவுகளிலும், அரசியல் வரலாற்றிலும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button