News

பல பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு.. விலையை உயர்த்தும் வரை விநியோகத்தை நிறுத்திய நிறுவனங்கள்..

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள தனியார் எரிபொருள் நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கனிம எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தட்டுப்பாடு காரணமாக, குறிப்பாக அப்பகுதிகளிலுள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தையும் தொழில்களையும் தொடர முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என அச்சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த மாகாணங்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே டீசல் வழங்கி வருவது, இந்த நெருக்கடி தீவிரமடைய பிரதான காரணமாக அமைந்துள்ளது.

தற்போது LIOC நிறுவனத்திற்கு சொந்தமான 275 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், Sinopec நிறுவனத்திற்கு சொந்தமான 150 நிலையங்கள் மற்றும் RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான 100 நிலையங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்கள் மூலமான எரிபொருள் விநியோகம் சுமார் 50 சதவீதத்தால் (50%) வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இந்நிலைமை தொடர்ந்தால் சுமார் 500 தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களை முற்றாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என விநியோகஸ்தர்கள் எச்சரிக்கின்றனர்.

போக்குவரத்து செலவு உள்ளிட்ட உற்பத்திச் செலவுக்கு ஏற்ப எரிபொருள் விலையை திருத்தியமைக்குமாறு கோரி, குறித்த தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும், அரசாங்கம் இதுவரை அதற்கு எவ்வித சாதகமான பதிலும் வழங்கவில்லை.

இப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிடம் நேரம் கோரி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என விநியோகஸ்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Recent Articles

Back to top button