News

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 760 கோடி ரூபாய் நிகர நஷ்டம்

ஸ்ரீலங்கன் விமான சேவை 2024/2025 நிதியாண்டில் 7.6 பில்லியன் ரூபாய் நிகர நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளதாக, அந்த நிதியாண்டுக்கான வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நடப்பு நிதியாண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 296.5 பில்லியன் ரூபாய் வருமான ஈட்டியுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஏற்பட்டுள்ள உலகளாவிய ஆபத்தான சவால்கள், புவிசார் அரசியல் நெருக்கடிகள் காரணமாக எரிபொருள் நுகர்வு அதிகரிப்பு, ஏர்பஸ் விமான எஞ்சின்களில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக உலகளாவிய ரீதியில் விமானங்கள் தரையிறக்கப்படுவது மற்றும் உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் அவசியமான பராமரிப்புப் பணிகள் தாமதமாவது போன்ற காரணங்கள் விமான சேவையின் வருமானம் குறையக் காரணமாக அமைந்துள்ளன.  

மேலும், நாணய மாற்று விகிதங்களின் தாக்கம், கொள்ளளவு வரம்புகள் மற்றும் உலகளாவிய வருமானக் குறைவு காரணமாக, 2023/2024 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2024/2025 நிதியாண்டில் பயணியர் வருமானம் 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திட்டமிடப்படாத எஞ்சின் பழுதுபார்ப்புச் செலவாக 2.2 பில்லியன் ரூபாயும், நிகர நிதிக் கட்டணமாக 31.6 பில்லியன் ரூபாயும் கணக்கிடப்பட்டதன் பின்னர், நிறுவனத்திற்கு 7.6 பில்லியன் ரூபாய் நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

Recent Articles

Back to top button