ஐஸ் கொள்கலனைக் கைப்பற்றிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிகாரிகள் 6 பேருக்கு உடனடியாக இடமாற்றம்
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளான 06 பேரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
இந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்குப் பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
சுமார் 1000 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் ஏற்றப்பட்ட கொள்கலன் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் வைத்து இடத்தைக் கைப்பற்றிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ‘ஐஸ்’ கொள்கலனைக் கைப்பற்றிய சம்பவத்தில் இடம்பெற்ற அக்கிரமங்கள் மற்றும் அலட்சியப்போக்கு காரணமாகவே இந்த உயர் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, அதன் பணிப்பாளர், இரண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இது தவிர, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கீழ்நிலை அதிகாரிகள் சிலரும் எதிர்காலத்தில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இந்த ‘ஐஸ்’ கொள்கலன் கடந்த ஆகஸ்ட் மாதமே கைப்பற்றப்பட்டது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு அவர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, இந்த ‘ஐஸ்’ கொள்கலன் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இது குறித்து இலங்கை சுங்கத் துறைக்கும் நீதிமன்றத்திற்கும் அறிவித்து விசாரணைகளைத் தொடங்கியிருந்தது.
எனினும், இந்த ‘ஐஸ்’ கொள்கலனைக் கைப்பற்றுவதற்கான விசாரணைகளை மிக மெதுவாக முன்னெடுத்ததாகவே தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த ‘ஐஸ்’ கொள்கலன், சுமார் ஒரு மாத காலமாக கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடத்தல்காரர்கள் எவ்வாறேனும் அந்தக் கொள்கலனைத் துறைமுகத்திலிருந்து வெளியேற்ற முயற்சித்தனர். அப்படி வெளியேற்ற முடியாவிட்டால், அதை மீண்டும் மறுஏற்றுமதி (Re-export) செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்த வேளையில், பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தனியாக மற்றொரு விசாரணையைத் தொடங்கியது.
அதன்படி, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுங்கத் துறைக்கு அறிவித்து, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, கொள்கலனைத் திறந்து அதிலிருந்த 467 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கைப்பற்றினர்.
இந்த ‘ஐஸ்’ கொள்கலன் தொடர்பாக, இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட 7 கடத்தல்காரர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
• ஹேமந்த ரந்துனு



