News

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் இலங்கையில்  எரிபொருள் விலைகள் அதிகரித்து மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க எதிர்வரும் 3 மாதங்களுக்கு 4100 கோடி ரூபாயை ஒதுக்கிய அரசாங்கம்

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள சுமைகளிலிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 3 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ள இந்த மானியத்துக்கு ரூ. 4100 கோடி ஒதுக்கப்படவுள்ளது.

அமைச்சரவை அனுமதிக்காக இத்திட்டம் விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மத்தியகிழக்கில் நீடிக்கும் யுத்த சூழ்லைகள், எரிபொருட்களின் விலைகளிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் உறுதிமொழிக்கிணங்க இந்த மானியம் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

ஏற்கெனவே அதிகரித்திருந்த விலைகளிலிருந்து நுகர்வோரை பாதுகாக்கவும் அரசாங்கம் மானியம் வழங்கியிருந்தது. விலை உயர்வின் ஒரு பகுதியை பொறுப்பெடுத்த அரசாங்கம் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் டீசல் 1 லீற்றருக்கு ரூ. 100 உம், பெற்றோல் 1 லீற்றருக்கு ரூ. 20 உம் மானியமாக வழங்கியது.

இதற்காக அரசாங்கம் ரூ. 5,700 கோடியை செலவிட்டிருந்தது. டீசல் விலையைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் உலக சந்தை விலை 115 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. எனினும், ஜூன் மாத இறுதியில் அந்த அதிகரிப்பு 39 சதவீதமாகக் குறைந்தது. இதன் பயனை ஜூலை மாதத்தில் மக்களுக்கு வழங்கிய அரசாங்கம், மேலதிக மானியமின்றி டீசல் லீற்றர் ஒன்றின் விலையை ரூ. 25 ஆல் குறைத்தது. இந்நிலையில், பெற்றோலின் உலக சந்தை விலை, பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் 71 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

ஜூன் மாத இறுதியில் அது 43.2 சதவீதமாகக் குறைந்ததையடுத்து, அதன் பயனும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உலக சந்தையில் பெற்றோல் விலை மேலும் குறைந்தது.

இதன் காரணமாக, உள்நாட்டு சந்தையிலும் பெற்றோல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது.

எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை மீண்டும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஓகஸ்ட் மாதம் முதல் உலக சந்தையில் பெற்றோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக அதிகரித்தன.

தற்போது பெப்ரவரி மாத விலையுடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் டீசல் விலை 92 சதவீதத்தாலும், பெற்றோல் விலை 78 சதவீதத்தாலும், கச்சா எண்ணெய் (மர்பான்) விலை 66 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.எனினும், உள்நாட்டு சந்தையில் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெற்றோல் விலை 36.2 சதவீதமும், டீசல் விலை 35.9 சதவீதமும் மட்டுமே அதிகரித்துள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய விலை அதிகரிப்பின் முழுச் சுமையையும் மக்களுக்கு வழங்காமல், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான எரிபொருள் மானியமாக வழங்க அரசாங்கம் 4,100 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button