News

இலங்கையின் சனத்தொகையில் 51–52 சதவீதம் பெண்களாக இருந்தபோதிலும், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 9.8 சதவீதமாக மட்டுமே உள்ளது ; சஜித்

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திற்கொண்டு, இராணுவச் செலவுகள் மற்றும் ஆயுத மோதல்களை விட அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் பகிரப்பட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கு சர்வதேச சமூகம் முன்னுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.



இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று (19) Inter Pares அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய சர்வதேச பயிலரங்கில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பொருளாதார வலுவூட்டல், இளைஞர்களின் பங்கேற்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களையும் அவர் வலியுறுத்தினார்.



இலங்கையின் சனத்தொகையில் 51–52 சதவீதம் பெண்களாக இருந்தபோதிலும், பாராளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் 9.8 சதவீதமாக மட்டுமே உள்ளதாக சுட்டிக்காட்டிய சஜித், தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பு 33–34 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.



பெண்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு, தொழில்முயற்சி, நிதி வசதிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.



மேலும், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் தீர்மானங்களை எடுக்கும் செயற்பாடுகளில் வலுவான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் உரிமைகள், கௌரவம், சமத்துவம் மற்றும் அணுகல் வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.



இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டிய அவர், 2024ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 42 சதவீதத்தை மேல் மாகாணம் பெற்றுத் தந்துள்ளதாகவும், ஏனைய எட்டு மாகாணங்களும் மீதமுள்ள பங்கினை பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.



வறுமை, தொழிலின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வாழ்வாதார இழப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அதிக வளங்களை ஒதுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்த சஜித், போரை விட சமாதானத்திற்கும், மோதலை விட ஒத்துழைப்பிற்கும், இராணுவச் செலவுகளை விட மனித அபிவிருத்திக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button