News

அரசின் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக பொறியியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு…

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனைகள் மூலம் அரச சேவைப் பொறியியலாளர்களின் நியாயமான தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல், அவர்களை முழுமையாகப் புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (நவம்பர் 13) நாடளாவிய ரீதியில் சுகயீன விடுப்பு அறிக்கையிட்டு ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச சேவைப் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை பொறியியல் சேவை அதிகாரிகளுக்குத் தொடர்ச்சியாக வழங்கி வந்த ‘களப் பங்குபற்று மற்றும் போக்குவரத்து ஆலவன்மை (Field Participation and Transportation Allowance)’ 2024 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் நியாயமற்ற முறையில் வெட்டப்பட்டிருந்தது. குறித்த கொடுப்பனவை 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் மூலம் மீள ஸ்தாபித்து வழங்குவதாக அரசாங்கத் தரப்பிலிருந்து இதற்கு முன்னர் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், சமர்ப்பிக்கப்பட்ட புதிய வரவு – செலவுத் திட்டம் மூலம் அந்த வாக்குறுதி மீறப்பட்டு பொறியியல் சேவை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அச் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

அரசாங்கத்தின் இத்தகைய தன்னிச்சையான செயற்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்து, சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார மற்றும் செயலாளர் பொறியியலாளர் எம்.பி.ஐ.பி.எம். பத்திரண ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், 12 ஆம் திகதி கூடிய நிறைவேற்றுக் குழுவுக் கூட்டத்தில் இந்தப் பணிப்புறக்கணிப்புத் தீர்மானம் ஒருமனதாக எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் பல பிரமாண்டமான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள பின்னணியில், அந்தத் திட்டங்களின் முக்கிய தொழில்நுட்ப மற்றும் களப் பங்கை முன்னெடுத்துச் செல்வது அரச சேவைப் பொறியியலாளர்களாவர்.

இன்று முன்னெடுக்கப்படும் அடையாளப் பணிப்புறக்கணிப்பு அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் ஆரம்ப எச்சரிக்கை மட்டுமே சுட்டிக்காட்டும் சங்கம், இதற்கு விரைவான மற்றும் நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்துள்ளது. அவ்வாறான நிலை ஏற்பட்டால் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் முடங்குவதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button