News

இது உன்னதமான காதலின் வெளிப்பாடு அல்ல – சட்டப்படி குற்றம் ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் விடுத்த எச்சரிக்கை



உடுதும்பறை பகுதியில் குகையொன்றில் வசித்து வந்த நிலையில் மீட்கப்பட்ட  சிறுமி மற்றும்  அவர் பிரசவித்த பச்சிளம் குழந்தை சிகிச்சை பெற்றுவரும் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு நேரில் சென்ற மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் நிலைமைகளை பார்வையிட்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துவௌியிட்ட அவர், சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்வைக் காதலின் உன்னத நிலையாகச் சித்தரிப்பவர்களுக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

இச்சம்பவத்தை எக்காரணம் கொண்டும் “உன்னதமான காதலின் வெளிப்பாடு” என்றோ அல்லது “வீரச் செயல்” என்றோ கருதக் கூடாது எனத் தெரிவித்த அமைச்சர், இது 16 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியுடன் மேற்கொள்ளப்பட்ட சட்டப்பூர்வமான வன்புணர்வு மற்றும் குற்றவியல் தவறு என்பதைத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இதனை ‘காதலின் சின்னம்’ என வர்ணித்து பதிவுகளை வெளியிடுவது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாகும் எனவும், இது சமூகத்தை முற்றிலும் தவறான பாதைக்கு திசைதிருப்பும் செயலாகும் எனவும் அவர் கடுமையாக எச்சரித்தார்.

ஒரு குழந்தை மற்றொரு குழந்தையைப் பராமரிக்க வேண்டிய பரிதாபகரமான நிலை இங்கு ஏற்பட்டுள்ளதாகவும், முறையான கர்ப்ப காலப் பராமரிப்புகளோ அல்லது பச்சிளம் குழந்தைக்குப் பிறப்பு முதல் இரண்டு மாதங்கள் வரை வழங்கப்பட வேண்டிய அவசியமான தடுப்பூசிகளோ எவையும் இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலை தொடர்ந்தால் சமூகம் மீண்டும் பழங்குடி காலத்திற்குத்தான் பின்னோக்கிச் செல்லும் எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

அத்துடன், சிறுவர்கள் 16 வயது வரை கட்டாயக் கல்வி பெறுவதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோரின் முழுப் பொறுப்பாகும் எனவும், பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றோருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, தற்போது தாயும் சேயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் விடுபட்ட தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button