News

கெஹெலிய காலம் போலவே இந்த ஆட்சிக் காலத்திலும் ரூ. 1,210 மில்லியன் பெறுமதியான தரமற்ற மருந்துகள் இறக்குமதி …

அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மருந்துகள், அறுவைச் சிகிச்சை மற்றும் ஆய்வுகூட மருத்துவ விநியோகங்களுள், தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததன் காரணமாக கடந்த ஆண்டில் (2025) ரூ. 1,210.52 மில்லியன் பெறுமதியான மருத்துவ விநியோகங்கள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக, மருத்துவ விநியோக உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கக் கூட்டணியின் தலைவர் விசேட வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) ஊடாகத் தரமான மருந்துகளைப் பரிசோதிப்பதற்கான திட்டவட்டமான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஆட்சிக் காலத்தைப் போலவே, இவ்வாறு தொடர்ச்சியாக மருந்துகளின் தரம் குறைவதும் பாவனையிலிருந்து நீக்கப்படுவதும் கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மேலும் ரூ. 1,409.23 மில்லியன் பெறுமதியான மருத்துவ விநியோகங்கள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்தமையால் தற்காலிகமாகப் பாவனை இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரம் குறைந்த புற்றுநோய் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்யும் செயன்முறையொன்றும் இக்காலப்பகுதியில் நடைபெற்று வருவதாகவும், இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டிய போதிலும் தற்போதைய சுகாதார அமைச்சரோ அல்லது ஜனாதிபதியோ இவை குறித்துக் கவனம் செலுத்தாமையே கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

கண்ணுக்குத் தெரியும் துகள்கள், மருந்தியல் (pharmaceutical/pharmacological) காரணிகள், விவரக்குறிப்புகளுக்கு இணங்காமை, நிறம் மாறுதல் மற்றும் பாதகமான விளைவுகள் போன்ற காரணங்களினால் இம்மருத்துவ விநியோகங்கள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்திருந்தன. மேலும், கண் பாக்டீரியா தொற்றுகள், நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய், சுவாச, தோல் மற்றும் மனநல நோய்களுக்கான மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளுள் அடங்கியிருந்ததாகவும் கணக்காய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button