News

நாம் வரி விதித்துப் பெறும் பணத்தை மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்குவோம்..- TB

நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும், அரசாங்கம் தற்போது பிரமாண்டமான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும், அடுத்த ஆண்டு முதல் வீடமைப்பு நிர்மாண உதவித் தொகையை 15 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி. பி. சரத் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், அரசாங்கம் மக்களிடமிருந்து வரிப் பணத்தைச் சேகரிப்பது, அந்தப் பலன்களை மீண்டும் சலுகைகளாக மக்களிடமே வழங்கும் நோக்கத்துடன்தான் என்பதை வலியுறுத்தினார்.

அதற்கமைய, நடப்பு ஆண்டில் வீடமைப்பு நிர்மாண உதவியாக வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் தொகையை, எதிர்வரும் ஆண்டில் 15 லட்சம் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் கொள்கையளவில் தீர்மானித்துள்ளதாக அவர் இங்கு வெளிப்படுத்தினார்.

மேலும், தேசிய வரவு-செலவுத் திட்ட முகாமைத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், திறைசேரியில் உள்ள அனைத்துப் பணத்தையும் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக மட்டுமே ஒதுக்குவதற்கு எந்தவொரு அரசாங்கத்தாலும் முடியாது எனச் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக, நெடுஞ்சாலைகள் உள்ளடங்கலாக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்மாணத் துறைக்காகவும் நிதி ஒதுக்குவது கட்டாயம் செய்யப்பட வேண்டிய பணியாகும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button