News

ஆளும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்…  இன்னும் எட்டுப் பேரைக் கைது செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பு

குருநாகல் , பிங்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்


பிங்கிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பென்ஜி ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயசிரி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் நேற்றைய தினம் குறித்த தொழிற்சாலைக்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்


இதன்போது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை தற்போதைக்கு வழங்கும் ஒப்பந்ததாரரை ரத்துச் செய்துவிட்டு தமக்கு நெருக்கமானவர்களுக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குமாறு அவர்கள் ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு அழுத்தம் பிரயோகித்ததாக தெரிவித்து பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்


பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை முற்றுகையிட்டு பிரதேசவாசிகள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, பொலிஸார் தலையிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வௌியில் அனுப்பும் நிலையேற்பட்டிருந்தது


இதன் போது இருதரப்பிலும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றிருந்தன.


இந்நிலையில் தனது அலுவல்களுக்கு இடையூறு மேற்கொண்டதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் விஜயசிறி பஸ்நாயக்க குளியாப்பிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்


அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் இன்னும் எட்டுப் பேரைக் கைது செய்யவுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



(நாரம்மலை-ஆர்.எப்.அஷ்ரப் அலீ)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button