லசந்த விக்ரமதுங்கவின் கொலையின் சாட்சிகளை மறைத்த மூவரை விடுதலை செய்யுமாறு சீ.ஐ.டீ யிடம் கோரி இருந்த சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, இன்று ரிவர்ஸ் ஜியரைப் போட்டுப் பின்வாங்கினார்.

By : Zafar Ahmed – சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையின் சாட்சிகளை மறைத்த மூவரை விடுதலை செய்யுமாறு ஜனவரி 27ம் திகதி சீ.ஐ.டீ யிடம் கோரி இருந்த சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க, இன்று ரிவர்ஸ் ஜியரைப் போட்டுப் பின்வாங்கி இருக்கிறார்.
தாம் யாருக்கும் கட்டுப்படப் போவதில்லை என்றும் முடிந்தால் உச்ச நீதிமன்றத்தில் வந்து பேசிக் கொள்ளுமாறும் தெனாவட்டாய் சொல்லிக் கொண்டிருந்த சட்டமா அதிபரின் பிரதிநிதிகளுக்கு , சமூகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த நெருக்குவாரங்களால் தம் நிலைப்பாட்டில் இருந்து யூடேர்ன் அடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளில் அரச தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி வழக்காடுவதுடன் அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவது, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்க காவல் துறைக்கு உத்தரவு வழங்குவது என்பவை தான் சட்டமா அதிபருக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் வழங்கப்பட்டு இருக்கும் இரண்டு பெரும் பொறுப்புக்கள்.
சட்டமா அதிபர் என்ற தனிநபர் ,பெரும்புள்ளிகள் சம்பந்தப்பட்டு இருக்கும் செவன் ஸ்டார் குற்றங்களில் வழக்குத் தொடுப்பதா இல்லையா என்று ஏகபோகமாய் முடிவெடுப்பதே உண்மையில் நெருடலான விடயம்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதற்கு முறையான பொறிமுறை கொண்டு வரப்படும் என்று சொல்லப்பட்டு இருந்தது. இதோ இப்போது அமுலாகப் போகிறது.இனி சட்டமா அதிபரால் மட்டும் தன்னிச்சையாய் முடிவெடுக்க முடியாது. நீதியமைச்சின் செயலாளர், சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர்,இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அல்லது அவரது பிரதிநிதி என்று அது விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
நீதித்துறை மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து ஒரு பூரணப்படுத்தப்பட்ட கமிட்டியாக இதை மாற்றுமாறு இளம் ஊடகவியலாளர் அமைப்புக்கள் அரசு மீது அழுத்தம் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன. கைகுலுக்கிப் பாராட்ட வேண்டிய விடயம் இது.
எது எப்படியோ இப்போது சட்டமா அதிபர் கண் குருடாக்கப்பட்டு ,பல்லு பிடுங்கப்பட்டு கண்காட்சியில் டான்ஸ் ஆட வைக்கப்படும் பாம்பு போல இருக்கிறார்.
இதே மாதிரிதான் பொலிஸ் கமிஷனும் தூக்கத்தில் இருந்து தடலாடியாய் எழுந்து இருக்கிறது. டீ.ஐ.ஜீக்கள் உட்பட 139 உயரதிகாரிகள் தடலாடியாய் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பெரும் குற்றங்களை விசாரிக்க சீ.ஐடிக்கு மேலதிகமாய் மத்திய குற்றப் விசாரணைப் பிரிவு (CCIB) ஒன்று நிறுவப்பட்டு இருக்கிறது.
சட்டமா அதிபர் திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் சரியான சுற்றுவட்டத்திற்குள் வந்துவிட்டால்தான் அரச இயந்திரம் முறையாய் சுழலும். அப்படி இல்லாதபட்சத்தில் கடந்த நல்லாட்சி அரசுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவே ஏற்படும் என்பதைப் புதிதாய்ச் சொல்லத் தேவை இல்லை.
இவ்வளவு பெரும் அடைவுக்கும் இந்நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் இங்கே விசேடமானது. அவர்கள் ஜனாதிபதியின் சட்டை பொத்தான் முதல் நடை உடை பாவனைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்த இந்த நான்கு நாள்களுக்குள் தான் இவ்வளவும் நடந்து முடிந்து இருக்கிறது.
சட்டமா அதிபர் விவகாரத்தில் ஏற்பட்டது போல அரசு மீது இப்படியான அழுத்தங்கள் தொடர வேண்டும்.அப்போதுதான் மக்களாணை என்றைக்கும் பாதுகாக்கப்படும். By Zafar ahmed



