உலகச் சந்தையில் எண்ணெயின் விலை குறைந்தாலும், இலங்கையில் தற்போதைக்கு விலையைக் குறைக்க முடியாது…
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ஓரளவுக்குக் குறைந்த போதிலும், இலங்கையில் எரிபொருள் விலைகளை மேலும் சில காலத்திற்கு தற்போதைய மட்டத்திலேயே பேண வேண்டியிருக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
தெரண தொலைக்காட்சி ஊடகத்துடனான நேர்காணலின் போதே அமைச்சர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்தினால் எரிபொருளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து விளக்கிய அமைச்சர், ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 20 ரூபாயும் மானியம் வழங்கும் வேலைத்திட்டம் மூன்று மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த மானிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
உலகச் சந்தையில் விலைகள் குறைந்த போதிலும், உள்நாட்டில் விலைகள் குறையாததற்கான முக்கிய காரணமாக, இதுவரை அரசாங்கம் மானியங்களை வழங்கி எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தியிருந்தமையையே அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
ஜூன் மாதத்திற்குப் பின்னர் அந்த மானியத்தை வழங்காதிருக்கத் தீர்மானித்தால், உலகச் சந்தையில் விலை குறைவடைவதன் நன்மையும், மானியம் நீக்கப்படுவதன் தாக்கமும் ஒன்றுக்கொன்று சமநிலையாகி, எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி நீடிப்பதற்கான போக்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது அரசாங்கத்தின் வருமான நிலைமை சாதகமாக உள்ளதாகவும், எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானம் 100% முதல் 120% வரையான அளவில் திரட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கு இணங்க, அனைத்து எரிசக்தி மானியங்களையும் ஏனைய நிவாரண நடவடிக்கைகளையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நீக்குவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் உலகச் சந்தையில் விலைகள் மேலும் குறைந்தால் மட்டுமே அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும், வெளிவாரி காரணிகளால் விலைகள் எதிர்பாராதவிதமாக அதிகரித்தால் அதில் தலையிடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



