News

“நாங்கள் ஆட்சிக்கு வந்து எரிபொருள், மின்சாரம், எரிவாயு விலைகளைக் குறைத்தோம்..” – விஜித

வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுத்த போதிலும், மத்திய கிழக்கில் ஏற்பட்ட எதிர்பாராத யுத்த சூழ்நிலை காரணமாக உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தமையினால், அந்த விலைகளை தற்காலிகமாக அதிகரிக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சுயாதீனதொலைக்காட்சி சேவையில் (ITN) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கும், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் இங்கு நினைவு கூர்ந்தார். குறிப்பாக, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கான மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவில் (சுமார் 13% இனால்) குறைத்து, அந்த நிவாரணத்தை தொடர்ந்து பேணி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலக சந்தை நிலவரமும் சவால்களும்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் ஏனைய எண்ணெய் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததாக அமைச்சர் விளக்கினார்.

“சாதாரண சூழ்நிலையில் ஒரு பேரல் எண்ணெய்யின் ‘பிரீமியம்’ (Premium) மதிப்பு சுமார் 3 டொலர்களாக இருந்தபோதிலும், யுத்தத்துடன் அது 52 டொலர்கள் வரை உயர்ந்தது. இந்த சவாலினாலேயே, எண்ணெய் விலைக்கு இணையாக மின்சாரக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியேற்பட்டது,” என்று வெளிநாட்டு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், டொலரின் மதிப்பு 354 வரை உயர்ந்து, பின்னர் மீண்டும் 334 வரை குறைந்தமை போன்ற எதிர்பாராத பொருளாதார மாற்றங்களும் இந்த விலை திருத்தங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு மீண்டும் நிவாரணம்

பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர் கடந்துவந்த குறுகிய காலப்பகுதியில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரித்தமையால் நாட்டின் இறக்குமதிச் செலவு உயர்ந்த போதிலும், தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஓரளவுக்கு சாதகமான நிலைமை தோன்றி வருவதாக அமைச்சர் கூறினார்.

யுத்த சூழ்நிலை தணிவடைவதோடு உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறையும் என்றும், கடல் வழிகள் திறக்கப்படுவதன் மூலம் கப்பல் கட்டணங்கள் மற்றும் விமானக் கட்டணங்கள் வீழ்ச்சியடையும் என்றும் வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தினார்.

அதன் பலனை எந்தவொரு தயக்கமும் இன்றி மக்களுக்கு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட திரு. விஜித ஹேரத், எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் நிச்சயமாக மீண்டும் குறைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Recent Articles

Back to top button