News

சுப்ரமணி நாய் உரிமையாளருக்கும் பாதயாத்திரைக் குழுவிற்குத் தலைமை தாங்கியவருக்கும் இடையில் முறுகல்  – பாதயாத்திரை தலைவர் நாயை காட்டி பல மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட  நாய் உரிமையாளர்

பேசுபொருளாக மாறியுள்ள ‘சுப்பிரமணியம்’ என்று அழைக்கப்படும் நாயை, அதன் உரிமையாளர் பாதயாத்திரைக் குழுவிலிருந்து பிரித்து, பொலிஸாரின் அனுமதியுடன் முச்சக்கரவண்டி மூலம் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்று சேர்த்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (07) காலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நாயின் உரிமையாளர், செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையை ஆரம்பித்து, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை வழியாக மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில் மற்றும் பொத்துவில் ஊடாக சுமார் 400 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, பாணமைப் பகுதியை திங்கட்கிழமை (06) வந்தடைந்தார்.

இதன்போது, பாதயாத்திரைக் குழுவிற்குத் தலைமை தாங்கியவருக்கும், நாய் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, நாயின் உரிமையாளர் அந்தக் குழுவிலிருந்து பிரிந்து பாணமைப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தங்கியிருந்தார்.

பின்னர், பாணமைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற நாய் உரிமையாளர், “சுப்பிரமணியம் என்று பெயரிட்டு நான் வளர்த்து வந்த எனது நாய், நான் பாதயாத்திரை செல்லும் போது என்னுடன் பின் தொடர்ந்து வந்தது. இந்த நாயை வைத்துக்கொண்டு பாதயாத்திரைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் பல மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார். எனவே, நான் எனது நாயைக் கதிர்காமத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறேன்” என்று பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று பொலிஸார் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (07) காலையில் முச்சக்கரவண்டி மூலம் நாயைக் கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று உரிமையாளர் சேர்த்துள்ளார்.

இதேவேளை, கல்முனையில் குறித்த நாயை இளைஞர் ஒருவர் அண்மையில் தாக்கிய விவகாரத்தையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் முகநூலில் மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டனர். மேலும், சவுதி அரேபியாவில் வசிக்கும் இளைஞர் ஒருவர், இந்தச் சம்பவம் தொடர்பாக இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தற்போது சமூகத்தில் ஒரு மத விவகாரமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button