News

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை 2 வருடங்கள் அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்புகள்?

22 ஆவது அரசியலமைப்பு திருத்தமும் – எதிர்ப்பு அலைகளும் !

உச்ச நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை 2 வருடங்கள் அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிர்கட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறித்த பதவியாளர்களின் வயதெல்லையை அதிகரிக்க வேண்டும் எனில் அரசியலமைப்பின் 146 பிரிவு திருத்தியமைக்கப்படல் அவசியம். எனவே 22 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தமாக இந்த திருத்தம்  மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதால், அரசாங்கம் உத்தேச திருத்ததின் முன்மொழிவுகளை மிகவிரைவில் வர்த்தமானியாக வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

குறித்த சட்ட மூலம்  ஊடாக அனுபவம் மிக்க நீதிபதிகளை கொண்டு,  நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவுபடுத்தமுடியும் என்பதே அரசாங்கத்தின் வாதமாகும்.

மொத்தம் 12 இலட்சம் வழக்குகள் நிலுவையிலிருந்த போதிலும், அவற்றில் பெரும்பாலானவை நீதவான் மற்றும்  மாவட்ட நீதிமன்றத்திலேயே இருக்கின்றன. ஆகவே உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதால் எந்த பிரயோசனமும் இல்லை என்பது எதிர்ப்பாளர்களின் பிரதிவாதம்.

நீதிபதிகளினதும் நீதிமன்றங்களினதும் எண்ணிக்கை கடந்த ஐம்பது வருடங்களில் அதிகரிக்கப்படவில்லை. எனவே நீதித்துறை சட்டத்தையும் (Judiciary Act) திருத்துவதன் ஊடாக நீதவான் நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும்  வயதெல்லையையும் 2 வருடங்களால் அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக வழக்குகளை விரைபு படுத்துவதற்காக புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கும் மாகாண அமைப்பில் மேன்முறையீடுகளை விசாரணை செய்யும் முறைமையையும் அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அறிய முடிகிறது. இது எவ்வாறு அமையப்போகிறது என்பது சட்டமூலம் வெளியாகிய பின்னரே முழுமையாக தெரியவரும்.

இவ்வாறான நிலையில், வழக்குகளை விரைவு படுத்துவதற்காக வேறு எந்த வகையாக  மாற்றீடான முன்மொழிவை நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரியவிடம் தெரண தொலைக்காட்சியின் 360 நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது அதற்கு பதில் இன்றி தடுமாறியிருந்தார்.

ஆனாலும் அதற்கு அடுத்த தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில்,  சட்டமா அதிபர் திணைக்களத்திலும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திலும் காணப்படும் வெற்றிடங்களும் அதிக வேலைப்பழுவுமே வழக்குகள் நிலுவையாவதற்குரிய காரணிகளாக முன்னால் தலைவர் சாலிய பீரிஸ் மூலம் கூறப்பட்டது. இது சரியாயின் இதற்குரிய தீர்வுகளையும் உத்தேச சட்ட மூலத்தில்  உள்ளடக்கப்படல் வேண்டும்


இதற்கு அப்பால், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு ஒன்றும் புதியதல்ல. 2016 ஆம் ஆண்டு சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்முழியப்பட்டிருந்தமையை அரசாங்க தரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

குறித்த சட்டமூலம் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையோடு மட்டுப்படுத்தப்படாமல், அரசியல் உள்நோக்கம் உடையதாகவும் இருதரப்பாலும் சந்தேகிக்கப்படுகிறமையே சர்ச்சைகளுக்குரிய இன்னுமொரு காரணம்.

தற்போது பதவியிலிருக்கும் பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சுரசேனவை தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்காகவே இந்த சட்ட மூலம் அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகிறது என்பதே எதிர்ப்பாளர்களின் மறைமுக காரணமாகியிருக்கிறது.

இந்த எதிர்ப்புக்களின் பிண்ணனியில் ரணில் விக்ரமசிங்க இருப்பதாகவும், அவர் ஊடாக அரசியல்வாதிகளின் முக்கிய வழக்குகள் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் நிலுவையாக வைத்துக்கொள்ளவே இந்த எதிர்ப்புக்கள் என அரச தரப்பு சந்தேகிக்கிறது.

கடந்த வாரம் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் கூட்டத்தில் இந்த விடயத்தில் மகாசங்கத்தின் எதிர்ப்பு மாநாடும், தொழில்சங்கத்தின் எதிர்ப்புகளும் வெளியாகவிருக்கின்றன என ரணில் ஆறூடம் கூறியிருந்தார்.

திட்டமிட்டபடி மகாசங்க மாநாடு நடைபெற்றாலும், எதிர்பார்த்த வரவுகள் இன்றி மாநாடு பிசுபிசுத்துப்போனது.

இதற்கும் அப்பால், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ராஜீவ் அமரசூரிய ரணிலோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பவர் என்பது அரசியல் வட்டாரத்தில் பரிமாறப்படும் கிசுகிசுவாகும்.

சமீபத்தில் ரணில் விக்ரமசிங்க கையில் கியூபா சுருட்டுடன் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் புகைப்படமொன்று வெளியாகியிருந்தமை உங்களுக்கு நினைவிருக்கும். அந்த புகைப்படத்தின் ஒருபாதியிலேயே ரணில் அமர்ந்திருக்கிறார்,  மறுபாதியில் அமர்ந்திருந்தவர் வேறு யாருமல்ல சாட்சாத் ராஜீவ் அமரசூரியதான்.

எது எப்படியாயினும், இந்த விடயம் நீதிமன்றத்தை தாண்டிய சுவாரசியமான அரசியலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button