வைத்தியசாலையில் கடமை புரியும் முஸ்லிம் சகோதரிகள் அணியும் ஹிஜாப் ஆடையால் நோயாளிகளின் பாதுகாப்பிற்கோ அல்லது வைத்தியர்களின் தொழில்சார் கடமைகளை நிறைவேற்றுவதற்கோ எந்தவிதமான தடையும் ஏற்படாது – முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது.. அதற்கு நான் முழுமையான ஆதரவை வழங்குகிறேன் ; கலாநிதி ஜனகன்

*முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது!*
*– கலாநிதி ஜனகன்*
முஸ்லிம் சகோதரிகள் முன்வைத்துள்ள ஆடை தொடர்பான கோரிக்கைக்கு நான் முழுமையான ஆதரவை வழங்குகிறேன்.
அவர்கள் அணிந்திருப்பது முகத்தை மறைக்கும் புர்கா அல்ல. முகம் முழுமையாகத் தெரியும் வகையிலான ஹிஜாப் மட்டுமே. எனவே, நோயாளிகளின் பாதுகாப்பிற்கோ அல்லது வைத்தியர்களின் தொழில்சார் கடமைகளை நிறைவேற்றுவதற்கோ இதனால் எந்தவிதமான தடையும் ஏற்படாது என நான் கருதுகிறேன்.
எனவே, வைத்தியர்களும் வைத்தியசாலை நிர்வாகங்களும் இவ்விடயத்தை தேவையற்ற பிரச்சினையாகக் கருதாமல், சம்பந்தப்பட்ட சகோதரிகளின் மத நம்பிக்கைகளையும் அடிப்படை உரிமைகளையும் மதித்து செயற்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
ஒவ்வொரு தனிநபரினதும் மத நம்பிக்கைகளையும் கலாசார அடையாளங்களையும் மதிப்பது இலங்கையின் பன்மைத்துவமான சமூகத்தின் முக்கியமான பண்பாகும். எமது நாட்டில் அனைத்து மக்களும் தமது மதத்தையும் நம்பிக்கைகளையும் சட்டத்தின் வரம்புக்குள் சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கான உரிமையை அனுபவிக்க வேண்டும்.
பிறரின் நம்பிக்கைகளை மதித்து, வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்வதே எமது நாட்டின் செழுமையான பண்பாட்டின் அடிப்படையாகும். குறுகிய மனப்பான்மை அல்லது தேவையற்ற தவறான புரிதல்களால் இந்தப் பண்பாட்டுச் செல்வத்தை நாம் ஒருபோதும் பாதிக்கக் கூடாது.
அதேவேளை, வைத்தியசாலைகளில் நோயாளிகளின் பாதுகாப்பு, சுகாதாரத் தரநிலைகள் மற்றும் தொழில்சார் பொறுப்புகள் ஆகியவையும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து தரப்பினரின் உரிமைகள், பொறுப்புகள் மற்றும் மத உணர்வுகளை சமநிலைப்படுத்தும் வகையில் நீதியானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்று விரைவில் எட்டப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
இலங்கையின் பன்மைத்துவத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், அனைவரும் ஒருவரது மத நம்பிக்கைகளையும் உரிமைகளையும் மதித்து செயற்படுவோம்.


