News

“இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது” – பிரதமர் ஹரிணி அமரசூரிய

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்றும், மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள முதலீடுகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய ஒப்பந்தம் (UN Global Compact) மற்றும் இலங்கை முதலீட்டு சபை (BOI) இணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளைக் கொண்ட முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

“Forward Faster Now” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் மேலும் உரையாற்றுகையில்:

“நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செயற்பட முடியாது. அதற்கு அரசு, தனியார் மற்றும் சிவில் சமூகங்கள் இணைவது அவசியமாகும்.இன்று வளர்ந்து வரும் நாடுகளில் வருடாந்த நிதிப் பற்றாக்குறை 2.5 டிரில்லியன் முதல் 4 டிரில்லியன் டொலர்கள் வரை உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் அந்தப் பற்றாக்குறை 1.5 டிரில்லியன் டொலர்களாகும். அதுமட்டுமன்றி, 2030 ஆம் ஆண்டளவில் இந்தப் பிராந்தியத்தில் அளவிடக்கூடிய நிலையான அபிவிருத்தி இலக்குகளில் 88 சதவீதமானவற்றை நாம் தவறவிடுவதற்கான பெரும் ஆபத்து உள்ளது. எனவேதான், இந்த நிதி முதலீடுகளை நாம் விரைவுபடுத்த வேண்டும்.

சவால்கள் நிறைந்த ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு, இலங்கை தற்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நமது பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 108.8 பில்லியன் டொலர்களாக உயர்ந்ததுடன், தலா வருமானம் 5,000 டொலர்களைக் கடந்தது. இருப்பினும், நமது இலக்கு வெறும் எண்களால் மட்டுமே காட்டப்படும் வளர்ச்சி அல்ல;

நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும், அனைவருக்கும் நியாயமான பலன்களைப் பகிர்ந்தளிக்கும் உண்மையான பொருளாதார மாற்றமே ஆகும்.வணிகத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கமாக நாங்கள் அதிகபட்ச ஆதரவை வழங்குவோம். ஆனால், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலீடுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மனித உரிமைகள் மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புள்ள முதலீடுகளையே எதிர்பார்க்கிறோம். தொழிலாளர்களுக்குப் போதுமான ஊதியம் வழங்குவது, தொழிற்பயிற்சிகளை அளிப்பது, முறையான வரிகளைச் செலுத்துவது மற்றும் சுற்றாடலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவது ஆகியவை ஒவ்வொரு வணிகத்தினதும் அடிப்படைப் பொறுப்பாகும்.

குறிப்பாக, பெண்கள் மற்றும் இதுவரை சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் இணைவதற்கான தப்புகளை அகற்றுவது எமது முதன்மையான முன்னுரிமையாகும்.காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை அசாம்பாவிதங்கள் முழுப் பிராந்தியத்தின் விவசாயம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்திய ‘நிலையான நிதி வரைபடம்’ மற்றும் ‘பசுமைப் பத்திரக் கட்டமைப்பு’ ஆகியவற்றின் மூலம் காலநிலைச் சவால்களை எதிர்கொள்ளவும், உள்நாட்டு சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களுக்கு நிதி வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை என்பது சுற்றாடலை மதிக்கும், நியாயமான வளர்ச்சியைப் போற்றும் ஒரு நாடாகும். எனவே, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நீண்டகால முதலீடுகளுக்கு எமது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” என்று பிரதமர் கூறினார்.

Recent Articles

Back to top button