News

பாராளுமன்றத்தின் உணவுக்கான செலவு பாரிய அளவில் உயர்வு.. ஒரு ஆண்டிற்கு 24 கோடி செலவு .. எம்.பி.க்களின் உணவு வேளைகள் 148% வீதத்தினால் அதிகரிப்பு!

2025 ஆம் ஆண்டில் இலங்கை பாராளுமன்றத்திற்கு உணவு மற்றும் பானங்களை கொள்முதல் செய்வதற்காக 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் புதிய வருடாந்த செயல்திறன் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் உணவு மற்றும் பானங்களைக் கொள்முதல் செய்வதற்காக மட்டும் 247,049,010.08 ரூபாய் (ரூ. 24.7 கோடி) செலவிடப்பட்டுள்ளது. இது தவிர, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொள்முதல் செய்வதற்காக 2,278,758.12 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்றத்தில் உணவு சமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எரிவாயுவிற்காக (Gas) 3,050,850.00 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்காக எதிர்பார்க்கப்பட்ட இலக்கான 7,200 என்ற எல்லையைத் தாண்டி, 10,670 தடவைகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 148 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் விருந்தினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களுக்காக 361,930 தடவைகள் உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட 119 சதவீதம் அதிகமாகும்.

பாராளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து உணவகங்கள் தினமும் இயங்கி வருகின்றன.

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நாட்களில்கூட, தினமும் 1,000 முதல் 1,200 நபர்களுக்கு உணவளிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button