நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க மகாநாயக்க தேரர்கள் ஆசீர்வதித்தனர்.. தொடர்ந்து செய்யுமாறு கூறினர்.. – பிரதி அமைச்சர்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுக்கு மூன்று நிகாயாக்களின் மகாநாயக்க தேரர்களின் முழுமையான ஆசி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து பிரதி அமைச்சர் தினிது சமன் குமார தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது, இந்த நடவடிக்கையை முன்னோக்கி கொண்டு செல்லுமாறு அவர்கள் திறந்தமனதுடன் அறிவுறுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த திருத்தம் குறித்து எதிர்க்கட்சியினர் வீணான அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசாங்கத்திற்கு சர்வாதிகாரப் பாதையில் செல்ல வேண்டிய தேவை இருக்குமானால் அதற்கு ஏற்கனவே பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமே போதுமானது என்றும் வலியுறுத்தினார்.
மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வழிகாட்டல்களுடனேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


