டி.ஏ. ராஜபக்ஷ, எமது ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர்… அவரின் பேரன் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு இப்போது வெலிக்கடை சிறையில் உள்ளார் – அதற்கு நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம் ; ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கமானது இலங்கையின் ஜனநாயக முறைமையையும் மக்களின் இறையாண்மையையும் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைது மற்றும் விளக்கமறியலையும் கண்டித்துள்ளார்.
1946 செப்டம்பர் 6 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தொடங்கப்பட்டதன் 80 ஆண்டுகளை முன்னிட்டு உரையாற்றிய விக்ரமசிங்க, கட்சியின் புதிய திட்டம் “இறையாண்மையை” பாதுகாப்பதிலும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தும் என்றார்.
டி.எஸ்.சேனாநாயக்கவின் தலைமையில் ஐ.தே.க உருவாக்கப்பட்டது என்பதையும், கட்சியின் தலைமைப் பதவிக்கு சேனாநாயக்கவின் பெயரை எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க முன்மொழிந்தார் என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
டி.ஏ.ராஜபக்ஷ கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர் என்றும், அவரது இரு மகன்கள் பின்னர் இலங்கையின் ஜனாதிபதிகளாகப் பணியாற்றினர் என்றும் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
டிசம்பர் மாதம் கட்சி மாநாட்டை நடத்துவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தொடர்பான நினைவேந்தல்கள் உட்பட தொடர்ச்சியான நடவடிக்கைகளை இம்மாதத்தில் ஐ.தே.க தொடங்கும் என்று விக்ரமசிங்க கூறினார்.
“அந்த மாநாட்டில், தற்போதைய காலத்திற்கு ஏற்ற யோசனைகள் மற்றும் கொள்கைகளுடனும், புதிய முகங்களுடனும், 21 ஆம் நூற்றாண்டிற்கான இலங்கையைக் கட்டியெழுப்ப நவீன ஐக்கிய தேசியக் கட்சியை நாங்கள் முன்வைப்போம்” என்று அவர் கூறினார்.
அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்துப் பேசிய விக்ரமசிங்க, அரசியலமைப்பின் 3 ஆவது பிரிவு இறையாண்மை மக்களுக்குரியது என்றும் அது பிரிக்க முடியாதது என்றும் தெளிவாக நிறுவுகிறது என்றார். முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது திருத்தம், கட்சியின் பார்வையில், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பதால், ஐ.தே.க அதனை எதிர்ப்பதாக அவர் கூறினார்.
அரசியல் கட்சிகளைக் குறிவைக்கும் கட்டுப்பாடுகள், அரசியல்வாதிகளின் கைதுகள் மற்றும் சுயாதீன தொழில்முறை அமைப்புகள் மீதான தாக்குதல்கள் நாட்டின் ஜனநாயக முறைமையை அச்சுறுத்துவதுடன் எதிர்த்தரப்பை பலவீனப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டத்தரணிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பௌத்த மதகுருமாருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் விக்ரமசிங்க விமர்சித்தார்.
“இந்த நாடு நாடாளுமன்றத்தில் இருந்து ஆட்சி செய்யப்படுகிறதா அல்லது பெலவத்தையிலிருந்து ஆட்சி செய்யப்படுகிறதா என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று கூறிய விக்ரமசிங்க, மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
ராஜபக்ஷவைப் பற்றிக் குறிப்பிட்ட விக்ரமசிங்க, டி.ஏ.ராஜபக்ஷ ஐ.தே.கவின் ஸ்தாபக உறுப்பினர் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், நாமல் ராஜபக்ஷவை அவரது பேரன் என்றும் வர்ணித்தார்.
“நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடையில் உள்ளார். அதற்கும் நாங்கள் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று விக்ரமசிங்க கூறினார்.



