எமது கட்சி தேர்தலில் வென்றால் 18 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து அமெரிக்கர்களுக்கும் 5,000 அமெரிக்க டொலர்களை வழங்குவேன்

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற இடைக்காலத் தேர்தலில் எத்தகைய அரசியல் தாக்கம் ஏற்பட்டாலும், ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு தாம் சிறிதும் வருந்தவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செய்தித் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது இதனைத் தெரிவித்த அவர், “வருத்தம் என்ற சொல்லுடன் எனக்கு உடன்பாடில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் இதே நடவடிக்கையையே மேற்கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையால் தமது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் சோர்வடைந்துள்ளதாகவும் கூறப்படுவதை நிராகரித்த ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தியதற்காக தமது ஆதரவாளர்கள் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இடைக்காலத் தேர்தல் முடிவடைந்தவுடன் ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்துவிடும் என்றும், தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் முயற்சிப்பதாகவும் ட்ரம்ப் கூறி வருகிறார்.
எனினும், போரின் காரணமாக மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளமை ஆளும் குடியரசுக் கட்சிக்கு தேர்தல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், குடியரசுக் கட்சி பாராளுமன்றப் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், 18 வயதைப் பூர்த்தி செய்த அனைத்து அமெரிக்கர்களுக்கும் 5,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ட்ரம்ப் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



