News

“முஸ்லிம்களை அமைச்சரவையில் நியமிக்க வேண்டிய கட்டாய காலம் அனுர அரசுக்கு வந்துவிட்டது

“முஸ்லிம்களை அமைச்சரவையில் நியமிக்க வேண்டிய கட்டாய காலம் அனுர அரசுக்கு வந்துவிட்டது.   …”நேற்று அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசன்னத்துடன் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்தையும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் பொலன்னறுவையில் விவசாயிகளுக்காக நடைபெற்ற கூட்டத்தையும், அங்கு திரண்டிருந்த மக்களின் எண்ணிக்கையையும் அவதானிக்கும் போது, ராஜபக்ஷ அணியினர் மீண்டும் தேசிய அரசியலில் செல்வாக்கை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளார்களா என்ற கேள்வி எழுகிறது என பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ராஜபக்ஷ அணியினர், தற்போது மீண்டும் மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கான அரசியல் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக, நேற்று நடைபெற்ற அரசியல் கூட்டங்களில் திரண்ட மக்களின் எண்ணிக்கையும், இரு தரப்பினரின் அரசியல் அணுகுமுறைகளும் கவனிக்கத்தக்கதாக உள்ளன.
அண்மையில் அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ரஞ்சித் நிர்மல் தேவசிறி, நாமல் ராஜபக்ஷவின் கைது சிங்கள மக்களிடையே அரசாங்கத்திற்கான செல்வாக்கைக் குறைக்கக்கூடும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் அரசியல் ரீதியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சிங்கள மக்களிடையே அரசியல் சரிவை எதிர்கொள்ளும் பட்சத்தில், அதன் தாக்கம் சிறுபான்மை சமூகங்களிடமும், குறிப்பாக அவர்களின் அரசியல் கட்சிகளிடமும் பிரதிபலிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு எழுச்சி மனநிலையும் உருவாகக்கூடும்.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின், சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவது அவசியமாகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் முக்கியமானதும் பலம் வாய்ந்ததுமான பொறுப்புகளில் முன்னிறுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது எனக் கூறலாம்.
சிங்கள மக்களிடையே உருவாகும் அரசியல் அலை, முஸ்லிம் மற்றும் தமிழ் பேசும் மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக எதிர்கால வடக்கு–கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இதன் பிரதிபலிப்பை காணக்கூடியதாக இருக்கலாம்.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மை மக்களிடமிருந்து அரசியல் ரீதியாக தூரமாகிச் செல்வதைத் தடுக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அல்லது அரசாங்கத்திற்கு ஆதரவான சிறுபான்மை பிரதிநிதிகளையாவது அமைச்சரவையில் உரிய பொறுப்புகளுடன் உள்வாங்குவது முக்கியமான அரசியல் நடவடிக்கையாக அமையும்.
இது வெறுமனே அமைச்சரவை பிரதிநிதித்துவம் தொடர்பான விடயம் அல்ல. சிறுபான்மை மக்களின் அரசியல் நம்பிக்கையைப் பாதுகாத்து, அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான அரசியல் முயற்சியாகவும் அமையும்.”
– பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்
கலாநிதி முபிஸால் அபூபக்கர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button