உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளை விட நமது சுகாதார அமைப்பு மிகவும் முன்னணியில் உள்ளது – நலிந்த ஜெயதிஸ்ஸ
உலகின் பல வளர்ச்சியடைந்த நாடுகள்கூட அடைய முடியாத சில குறிப்பிடத்தக்க சுகாதார சாதனைகளை இலங்கை வெற்றிகரமாக அடைந்துள்ள போதிலும், தற்போது வேகமாக அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் மற்றும் முதியோர் சனத்தொகையை பராமரிப்பது ஆகியவை நாட்டின் முன் உள்ள மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்:
“1978 ஆம் ஆண்டு கஜகஸ்தானில் நடைபெற்ற அல்மா-அடா (Alma-Ata) மாநாட்டின் மூலம் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 48 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தக் காலப்பகுதியில் சாதாரண குடிமக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை விரிவுபடுத்தியதுடன், தாய்மார் இறப்பு வீதத்தைக் குறைத்தல், சிசு மற்றும் குழந்தை இறப்பு வீதத்தை சிறந்த முறையில் குறைத்தல், மற்றும் தடுப்பூசி ஏற்றுவதில் உயர்ந்த சதவீதத்தை பதிவு செய்தல் போன்ற, வளர்ந்த நாடுகளுக்கே சவாலாக அமைந்த இலக்குகளை நம்மால் அடைய முடிந்தது. கடந்த வாரம் திமோர்-லெஸ்டே நாட்டில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்திய மாநாட்டில்கூட இலங்கையின் இந்த சுகாதார சாதனைகள் பெரிதும் பாராட்டப்பட்டன.
இந்த வெற்றியின் முக்கிய கௌரவம் பல தசாப்தங்களாக வீடு வீடாகச் சென்று கர்ப்பிணித் தாய்மார்களையும் குழந்தைகளையும் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கள சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களையே சாரும்.
எனினும், அன்று நாம் அந்த வெற்றிகளை அடைந்திருந்தாலும், இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக தொற்றா நோய்கள் மாறியுள்ளன. நமது நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் 83 சதவீதமானவை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற தொற்றா நோய்களாலேயே ஏற்படுகின்றன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, நாட்டின் சனத்தொகையில் 10 சதவீதம், அதாவது சுமார் 20 இலட்சம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், நாம் இதுவரை இரண்டு இலட்சம் என்ற சிறிய எண்ணிக்கையிலானவர்களையே அடையாளம் கண்டுள்ளோம்.
மேலும், எமது நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் பதிவாகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நோய் உடல் முழுவதும் பரவிய பின்னரே சிகிச்சைக்காக வருகின்றனர். புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுமார் 450 முதல் 500 மில்லியன் ரூபாய் மதிப்பிலான ஏழு Linear Accelerator இயந்திரங்கள் தற்போது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டு வருகின்றன. இந்த நோய்களுக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிட்டாலும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் இன்னும் உயர் மட்டத்திலேயே காணப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் வேகமாக அதிகரிக்கும் முதியோர் சனத்தொகையை பாதுகாப்பாக பராமரிப்பதும் நமது சுகாதார அமைப்பின் முன் உள்ள மற்றொரு பிரதான எதிர்கால சவாலாகும்” என அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.



