News

அனோஜனின் குடும்பத்திற்குப் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பு – கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார்



சவூதி தூதரகத்தில் மகஜர் கையளிக்க அனோஜனின் குடும்பத்தினரும் கொழும்பு செல்லச் சம்மதம்

(பாறுக் ஷிஹான்)


சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு ஜனசெத பெரமுனவின் தலைவரும் தேரருமான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (22) நேரில் விஜயம் செய்து குடும்பத்தினருக்குத் தமது ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

கல்முனை, நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அனோஜனின் இல்லத்திற்குச் சென்ற அக் குழுவினர், குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்ததுடன், அனோஜனைத் தண்டனையிலிருந்து மீட்பதற்காகத் தாம் முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்துத் தெளிவுபடுத்தினர்.

கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன் போராட்டம்

இச் சந்திப்பின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி நாளை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்திற்கு நேரில் சென்று அனோஜன் தொடர்பான விசேட கோரிக்கை மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட தேரர், அதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை (28) கொழும்புக்கு வருகை தருமாறு அனோஜனின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்தார். இக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அனோஜனின் குடும்பத்தினரும் அன்றைய தினம் கொழும்புக்கு வருகை தரச் சம்மதம் தெரிவித்தனர்.

மீண்டும் மன்னிப்புக் கோரிய தாயார்

இதன்போது ஊடகங்கள் முன் அழுது புலம்பிய அனோஜனின் தாயார், தனது மகனை மீட்டுத் தருமாறு இலங்கை மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததுடன், தனது மகன் செய்த தவறுக்காக மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரி நின்றார்.

இச் சந்திப்பில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரும் கலந்துகொண்டதுடன், தமிழ் – சிங்கள மொழிபெயர்ப்பு உதவிகளையும் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්‍යවේදී
FAROOK SIHAN(SSHASSAN)
B. F .A

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button